விரிவாக்க பகுதியில் ரோடு இல்லாததால்சேறும், சகதியாக மாறிய அவலம் சின்னமனுார் நகராட்சியில் அடிப்படை வசதியின்றி திண்டாட்டம்
சின்னமனூர்: சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். புதிது புதிதாக விரிவாக்க பகுதிகள் உருவாகின்றன. 10க்கும் மேற்பட்ட விரிவாக்க பகுதிகளில் வசிப்போர் குப்பையை தெரு நுழைவு வாயிலில் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு மோசமாக உள்ளது. குறிப்பாக சிவசக்தி நகரில் குடிநீர், சாக்கடை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. தற்போது பலதெருக்களில் ரோடு அமைக்க ஜல்லி கற்கள் பரத்தியம் ரோடு பணி சுணக்கத்தில் உள்ளது. அழகர்சாமி நகரில் பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. நகரின் தேரோடும் முக்கிய தெருக்களான வடக்கு, நடுத்தெருக்களை மட்டும் சிமென்ட் ரோடாக மாற்றியுள்ளனர். ஆனால் தண்ணீர் தொட்டி தெரு, வ.உ.சி.நகர் தெருக்கள்,தேவர் நகர், விஸ்வன் குளம் தெருக்களில் நடக்க கூட முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக உள்ளது. விரிவாக்க பகுதி பெரும்பாலும் மண் சாலையாகவே உள்ளது. மழை பெய்தால் இப்பகுதிகளில் வசிப்பவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத அவலம் தொடர்கிறது. வாரச்சந்தையில் கழிப்பறை பணிகள் அரைகுறையாக உள்ளது. சாமிகுளம் குடியிருப்பு பகுதி வழியே ஓடும் பி.டி.ஆர்., பாசன வாய்க்கால் கழிவு நீர் ஓடையாக மாறி விட்டது. இது நகரின் சுற்றுசூழலுக்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளது. காலை உணவு திட்டத்திற்காக கட்டப்பட்ட சமுதாய சமையலறை, கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் புனரமைக்கப்பட்ட கணினி வரி வசூல் மைய கட்டடம் தொடர்ந்து பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி பூட்டி வைத்துள்ளனர். சீப்பாலக்கோட்டை ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. சீப்பாலக்கோட்டை -எரசை ரோடு பிரியும் இடத்தில் சாக்கடை அடைப்பை சரி செய்ய உடைக்கப்பட்ட சிறுபாலம், சாக்கடை சீரமைக்கப்படாமல் உள்ளது. சிவசக்தி நகரில் பகிர்மான குழாய் உடைந்து தண்ணீர் தேங்குகிறது. அம்ரூத் திட்டத்தில் கட்டப்பட்ட குடிநீர் மேல் நிலைத் தொட்டிகள் காட்சி பொருளாக உள்ளது.