உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு கோலாகலம் கோவிந்தா.. கோவிந்தா கோஷம் முழங்கி பக்தர்கள் பரவசம்

 பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு கோலாகலம் கோவிந்தா.. கோவிந்தா கோஷம் முழங்கி பக்தர்கள் பரவசம்

தேனி: மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலையில் கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் 'கோவிந்தா...கோவிந்தா' கோஷம் முழங்கி குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தேனி அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. சுவாமி புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அல்லிநகரம் கிராமக் கமிட்டி, சடகோப ராமானுஜ கோஷ்டியார்கள் செய்திருந்தனர். மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. என்.ஆர்.டி.,நகர் சிவகணேச கந்த பெருமாள் கோவிலில் நடந்த விழாவில் என்.ஆர்.டி.,நகர், தேனி நகர்பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.தேனி வயல்பட்டி அனுமந்தராயப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்ட, மூலவருக்கு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. நட்சத்திரங்களை கூறி அர்ச்சனை உத்தமபாளையம்: யோக நரசிங்க பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 4:30 மணி முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதிகாலை 5:30 மணிக்கு கோயிலின் வடக்கு வாயில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவித்தா ...என முழக்கமிட்டனர். தீபாரதனை நடந்தது. அவல் பிரசாதம் வழங்கப்பட்டது. சின்னமனூர்: லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலிலும் அதிகாலை 4:00 மணிக்கு நின்ற நிலையில் உள்ள லெட்சுமி நாராயணப் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதிகாலை 5:30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது , கூடியிருந்த பக்தர்கள் நாராயணா... நாராயணா என கோஷமிட்டனர். பக்தர்கள் தங்களின் குடும்பத்தினர் பெயர் நட்சத்திரங்களை கூறி அர்ச்சனை செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. முத்தங்கி சேவை அலங்காரம் போடி: சீனிவாசப் பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை கோவிந்தா... கோவிந்தா... என்ற கோஷத்துடன் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசப் பெருமாள் சயன அலங்காரத்திலும், மூலவருக்கு முத்தங்கி சேவை அலங்காரத்திலும் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பெருமாளின் தரிசனம் பெற்றனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நாராயணி, அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஆழ்வாருக்கு மோட்சம் ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி எம்.எல்.ஏ., மகாராஜன், ஒன்றிய முன்னாள் தலைவர் லோகிராஜன், செயல் அலுவலர் சுதா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு கோயிலின் வடக்கு சுற்றுப் பிரகாரத்தில் கதலி நரசிங்கப்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது. சொர்க்கவாசலில் காத்திருந்த ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த சுவாமி வடக்கு வாசல் வழியாக சென்று அங்குள்ள மண்டகப்படி மண்டபத்தில் எழுந்தருளினார். பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமியை தரிசனம் செய்தனர். ராமநாம கீர்த்தனம் பெரியகுளம்: வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4:15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியுடன் பூஜைகள் துவங்கியது. திருப்பாவை சேவித்தல், உஷத்கால பூஜை, பரமபதவாசல் பூஜையுடன், பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா 'கோஷங்கள் எழுப்ப சொர்க்க வாசல்' வழியாக பக்தர்கள் வரதராஜப் பெருமாளை தரிசனம் செய்தனர். மாலையில் சொர்க்க வாசல் வழியாக வரதராஜப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. உற்ஸவர் ஆஞ்சநேயர் வீதி உலா சென்றார். நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 24 மணி நேரம் அகண்ட ஹரே ராம நாமகீர்த்தனம், திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவித்தல் நடந்தது. லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் வழியாக உற்ஸவர் லட்சுமி நாராயணப் பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை