உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேற்கு தொடர்ச்சி மலையில் எரியும் காட்டுத்தீயை அணைக்க ‛ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யுங்கள் தேனி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலையில் எரியும் காட்டுத்தீயை அணைக்க ‛ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யுங்கள் தேனி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை

தேனி : மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மலை உச்சியில் வனத்துறை தீத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத அளவில் காட்டுத்தீ எரிந்து அரிய வகை மரங்கள், தாவரங்கள் அழிவதை தடுக்க ஹெலிகாப்டர் மூலம் தீயணைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.' என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம், தோட்டக்கலை துணை இயக்குனர் பிரபா, கலெக்டரின் நேர்முக உதவியார் வளர்மதி ஆகியார் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:பாண்டியன், மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர், பெரியகுளம்: வைகை கரை வள்ளல்நதி அருகே துரைசாமிபுரம் தடுப்பணை உள்ளது. இதில் இருந்து நேரடி வாய்க்கால்கள் மூலம் ஏழு கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த தடுப்பணையில் இருந்து வாய்க்கால் அமைத்து வைகை ஆற்றில் பெருவெள்ளம் வரும் காலங்களில் ஆண்டிபட்டியில் வறண்ட பகுதிகளுக்கு பாசன வசதி செய்து தர வேண்டும்.கலெக்டர்: இது குறித்து ஆய்வு செய்து சாத்தியக்கூறு உள்ளதா என தகவல் அளிக்கவும்.கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர், தேனி: கோடை காலம் துவங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வனத்துறை தீத்தடுப்பு கோடுகள் அமைத்த இடங்களுக்கு மேல் தீ பற்றி அரிய வகை மரங்கள், தாவரயினங்கள், தீக்கிரையாவது தொடர்கிறது. வன வளம் பாதிக்கப்படுகிறது. வனத்துறை போராடியும் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் தவிப்பது ஆண்டுதோறும் தொடர்கிறது. இதனால் தேனி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலெக்டர்: வனத்துறையுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.சீனிராஜ், தமிழக தேசிய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர், தேனி: மாநில அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்கி உத்தரவிட்டது. ஆனால் உற்பத்தியாளர்கள் தற்போது லிட்டர் ஒன்றுக்கு ரூ.31 என வழங்கி வருகின்றனர். ஊக்கத்தொகை உற்பத்தியாளர்களுக்கு கிடைக்க வில்லை. ஆனால் துறை சார்பில் ஊக்கத்தொகை வழங்கி விட்டதாக தெரிவிக்கினறனர். ஆனால் பல மாதங்களாக இந்த ஊக்கத்தொகை பயனாளர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் மாவட்ட பால்வளத்துறை இணைப்பதிவாளர் நேரடி ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட வேண்டும்.கலெக்டர்: ஆய்வு செய்து ஊக்கத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊக்கத்தொகை வழங்காமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.கண்ணன், விவசாயி: ஆண்டிபட்டி சித்தார்பட்டியல் பல ஆண்டுகளாக மகளிர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தினமும் 500 லிட்டர் பால் வழங்குகின்றனர். பதிவாளர் சங்கத்தை பதிவு செய்ய நிராகரிப்பதால், தனியாருக்கு பால் விற்பனை செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர் சங்க பதிவை அங்கீகரித்து, ஆவினுக்கு பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலெக்டர்: மாவட்டத்தில் ஆய்வு செய்து 3 பால் உற்பத்தியாளர்களின் குழுக்களின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளோம். விதிப்படி இல்லாத பால் உற்பத்தியாளர்களை ஏற்றுக் கொள்ள இயலாது. உற்பத்தித்திறனை பரிசோதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை