காப்புக்காடுகளில் குப்பை கொட்டினால் வன பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை தேனி ரேஞ்சர் எச்சரிக்கை
தேனி: 'தேனி வனச்சரக காப்பு காடுகளில் பாலிதீன் குப்பை கொட்டுவோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் மூலம் தண்டிக்கப்படுவர்.' என தேனி ரேஞ்சர் சிவராம் எச்சரித்துள்ளார்.தேனி வனச்சரகத்திற்கு உட்பட்ட வால்கரடு, போடி வடக்கு மலை காப்புக்காடு, அரண்மனைப்புதுாரில் உள்ள பெருமாள் கோயில் விரிவாக்க நிலம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காப்புகாடுகளாகும். தேனி வால்கரடில் சிவாஜிநகர், அன்னஞ்சி பைபாஸ் பகுதிகளில் கொட்டிய 20 லாரி லோடு குப்பையை வனத்துறை சமீபத்தில் அப்புறப்படுத்தினர். ஒரு சில வன விலங்குகள் இறந்துள்ளன. இதனை பிரேத பரிசோதனை செய்ததில் அதில் பாலிதீன், பிளாஸ்டிக் குப்பையை உண்டது தெரிந்தது. மாவட்ட வன அலுவலர் சமர்த்தா வழிகாட்டுதலில் வனவிலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக வால்கரடு பகுதியில் சிவாஜி நகர், அன்னஞ்சி பைபாஸ் ரோடு, சமதர்மபுரம் ரேஞ்சர் ஆபீஸ் பகுதியில் விழிப்புணர்வு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளன. அதில், வனத்துறை காப்புக்காட்டில் அத்துமீறி செல்லுதல், வன உயிரினங்களை வேட்டையாடுதல், மது குடித்தல், தீ வைத்தல், மண் அள்ளுதல், குப்பை கொட்டுதல், ஆடு, மாடுகளை மேய்த்தல் ஆகியவை தண்டனைக்குரியது. இதனை மீறுபவர்கள் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி தண்ணடிக்கப்படுவர் என தெரிவித்துள்ளனர்.தேனி வனச்சரகர் சிவராம் கூறியதாவது: மாவட்ட வன அலுவலர் ஆலோசனையில் காப்புக்காடு பகுதியில் விழிப்புணர்வு எச்சரிக்கை பலகை வைத்துள்ளோம். விரைவில் காப்புகாடுகளுக்கான பாதுகாப்பு வேலி அமைக்க அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் வேலி அமைக்கப்படும், என்றார்.