பாழடைந்த அரசு கட்டடத்தில் திருடர்கள் தங்கி கைவரிசை
பெரியகுளம்: பொதுப் பணித்துறையின் பாழடைந்த கட்டடத்தில் திருடர்கள் தங்கி திருட்டு சம்பவம் நடத்துவதாக குடியிருப்பாளர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.பெரியகுளம் பொதுப் பணித்துறை அலுவலகம் அருகே அலுவலக பணியாளர்கள் பயன்படுத்திய பழைய குடியிருப்பு கட்டடம் பாழடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த வழியாக தாலுகா அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு விரைவில் செல்லலாம். கட்டட உறுதித்தன்மை மோசமாக உள்ளதால் நகராட்சி நிர்வாகம் இந்த பழைய கட்டடம், 'பாதுகாப்பு இல்லை' என, இடிக்க பொதுப் பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் பொதுப்பணித்துறை மவுனமாக உள்ளது. கடந்தாண்டு பாழடைந்த கட்டடத்தில் தங்கி நோட்டமிட்ட திருடர்கள், இதே பகுதியில் குடியிருக்கும் சசிக்குமார் உட்பட இருவர் வீட்டில் பூட்டு பீரோ உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 6 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.தென்கரை போலீஸ் ஸ்டேஷன் அருகே இருந்தும் போலீசார் இதுவரை திருடர்களை கைது செய்யவில்லை.இந்த பாழடைந்த கட்டடத்தில் இரவு நேரங்களில் திருடர்கள் தங்கி பெரியகுளம் பகுதியில் டூவீலர் முதல் பெரிய அளவிலான திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், கஞ்சா புகைப்பவர்கள், மது குடிப்பவர்கள் மறைவுப் பகுதியை பயன்படுத்துவதாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.