| ADDED : டிச 05, 2025 05:36 AM
மூணாறு: கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் மூன்று ஊராட்சிகளில் மலையாளிகள் யாரும் போட்டியிடவில்லை. கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக டிச.9, 11 ஆகிய நாட்களில் நடக்கிறது. இம்மாநிலத்தில் மொழி சிறுபான்மையினரான தமிழர்கள் இடுக்கி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் கூடுதலாகவும், காசர்கோடு மாவட்டத்தில் சில பகுதிகளில் கன்னட மொழி பேசும் மக்களும் வசிக்கின்றனர். இருப்பினும் மாநிலத்தில் மலையாளிகள் ஒருவர் கூட போட்டியிடாத மூன்று ஊராட்சிகள் இடுக்கி மாவட்டத்தில் உள்ளன. அதுவும் அந்த ஊராட்சிகள் மூணாறை சுற்றி அமைந்துள்ளன. மூணாறு ஊராட்சி 20 வார்டுகளை கொண்டது. அதில் ஒரு வார்டு மலைவாழ் மக்கள் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 19 வார்டுகளில் தமிழர்கள் மட்டும் போட்டியிடுகின்றனர். இந்த ஊராட்சியில் 58 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வட்டவடை ஊராட்சியில் உள்ள 14 வார்டுகளிலும் தமிழர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் மட்டும் போட்டியிடுகின்றனர். தவிர மூணாறு அருகே மலைவாழ் மக்களுக்காக கடந்த 2010ல் உருவாக்கப்பட்ட இடமலைகுடி ஊராட்சியில் உள்ள 14 வார்டுகளிலும் மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கின்றனர். மலைவாழ் மக்கள் தமிழ், மலையாளம் மற்றும் அவர்களுக்கான மொழி ஆகியவற்றை பேசுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.