மேகமலையில் குவியும் சுற்றுலா பயணிகள் கூடுதல் பஸ் வசதி தேவை
கம்பம்: கோடை வெயில் தாக்கம் அதிகம் இருந்தாலும், மேகமலையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வசதியை கருதியும் கூடுதல் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேனி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் மேகமலை முக்கிய இடம் பிடிக்கிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தேனி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் மேகமலை பகுதியில் குவிந்து வருகின்றனர்.மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு இரவங்கலாறு, மகாராசா மெட்டு, தூவானம் வரை பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால் இங்கு சென்று வர தேவையான பஸ் வசதி இல்லை. குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பஸ் வசதி உள்ளது. சொந்த வாகனங்களில் வருபவர்களுக்கு பிரச்னை இல்லை. பஸ்சை நம்பி வருபவர்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது. பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகளின் வசதியை கருதி மேகமலை பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.