மாவட்டத்தில் 2022க்கு முன்வரை தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் என 3 கல்வி மாவட்டங்கள் இருந்தன.கல்வி மாவட்டங்களை டி.இ.ஓ.,க்கள் கண்காணித்து வந்தனர். மூன்று கல்வி மாவட்டங்களையும் சி.இ.ஓ., நிர்வகித்து வந்தார்.இதனை மாற்றி 2022 அக்., நவ., ல் தனியார் பள்ளிகள், தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலர்கள் என பிரிக்கப்பட்டது. அப்போது முதல் தேனி கல்வி மாவட்டம் என ஒருங்கிணைக்கப்பட்டது.இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம்வகுப்பு வரை உள்ள அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை தொடக்கப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலரும், 9,10ம் வகுப்புகள் வரை உள்ள உயர்நிலை பள்ளிகளை இடைநிலைக்கல்வி மாவட்ட கல்வி அலுவலரும் கண்காணித்து வருகின்றனர். மேல்நிலைப்பள்ளிகளை சி.இ.ஓ.,வும் நேரடியாக கண்காணித்து வருகின்றனர். இதில் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட தனியார் பள்ளிகளை மட்டும் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் கவனித்து வருகிறார்.மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் அரசு, உதவிபெறும், பகுதி உதவி பெறும், தனியார் தொடக்கப்பள்ளிகள் 544, நடுநிலைப்பள்ளிகள் 174, உயர்நிலைப் பள்ளிகள் 66, மேல்நிலைப்பள்ளிகள் 156 என 940 பள்ளிகள் இயங்குகின்றன.இதில் வட்டாரம் வாரியாக தேனி 110, ஆண்டிப்பட்டி 149, மயிலாடும்பாறை 95, பெரியகுளம் 157, போடி 118, சின்னமனுார் 101, கம்பம் 114, உத்தமபாளையத்தில் 96 பள்ளிகள் உள்ளன. மாவட்டத்தில் பள்ளிகள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. இதனால் உத்தமபாளையத்தை தலைமையிடமாக கொண்டு சின்னமனுார், கம்பம், உத்தமபாளையம், போடி ஆகிய ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளை ஒருங்கிணைத்து புதிய கல்வி மாவட்டம் உருவாக்க பணிகள் நடந்தது.இந்நிலையில் உத்தமபாளையத்தை புதிய கல்வி மாவட்டமாக உருவாக்குவதற்கான அறிக்கை தயார் செய்து கல்வித்துறைக்கு அனுப்ப பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த கல்வியாண்டில் அதற்கான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பள்ளதாகவும் தெரிவித்தனர்.