| ADDED : ஏப் 20, 2024 06:08 AM
தேனி லோக்சபா தொகுதியில் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி) போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு மாதமாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்து நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும் முதல் ஓட்டு பதிவு செய்யும் நோக்கில் பலரும் ஆர்வமாக காத்திருந்து ஓட்டளித்தனர்.காலை 9:00 மணிக்கு அதிகபட்சமாக போடியில் 16 சதவீதமும், சோழவந்தானில் 11.23 சதவீதம்,, பெரியகுளத்தில் 9.8 சதவீத ஓட்டுக்களும், ஆண்டிபட்டியில் 8 சதவீத ஓட்டுக்களும், உசிலம்பட்டியில் 5 சதவீதமும், கம்பத்தில் 2.19 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி மொத்தம் 12.64 சதவீதமாகும். அதன் பின் ஓட்டுப்பதிவு விறுவிறுப்படைந்தது. காலை 11:00 மணிக்கு 25.75 சதவீதமாக உயர்ந்தது. பகல் 1:00 மணிக்கு 40.96 சதவீதம் ஓட்டுப்பதிவானது. பின் 3:00 மணிக்கு 51.43 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின.காலதாமதம்: ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் வருகை அதிகரித்த நிலையில் ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி சில நிமிடங்களில் சீரமைத்து மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது. இதில் தேனி பொம்மையக்கவுண்டன்பட்டி கள்ளர் நடுநிலை பள்ளி ஓட்டுச்சாவடி எண் 215ல் காலையில் ஒரு ஓட்டு பதிவான நிலையில் கட்டுப்பாட்டு இயந்திரம் பழுதடைந்தது. கவுண்டிங் டிஸ்பிளே தவறானதால், ஓட்டுப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மாற்றப்பட்டு,பின் காலை 8:56 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. வாக்காளர் ஓட்டுச்சீட்டு எடமால் தெருவில் உள்ள என்.எஸ்., மகளிர் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி எண் 258, பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளியில் இருந்தது. ஆன்லைன் வாக்காளர் பட்டியலில் தவறான முகவரி இருந்ததால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்து, பின் பிரசன்டேசன் கான்வென்ட் பள்ளி வந்து ஓட்டளித்தனர். இதனால் வாக்காளர்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகள், சீனியர் சிட்டிசன் வாக்காளர்களுக்கு 12டி'படிவம் குறித்த விழிப்புணர்வு இன்றி அதிகம் பேர் ஓட்டுச்சாவடிக்கு நேரடியாக வந்து வாக்களித்தனர். மாலை 6:00 மணி நிலவரப்படி 69.01 சதவீத ஓட்டுக்கள் விறுவிறுப்பாக பதிவாகின. மாவட்டத்தில் ஆங்காங்கே கட்சியினரிடையே நடந்த சிறு,சிறு சலப்பை உடனே போலீசார் தலையிட்டு அமைதிப்படுத்தி ஓட்டுப்பதிவு தடங்கல் இன்றி தொடர வழி வகை செய்தனர்.