| ADDED : டிச 06, 2025 02:10 AM
ஆண்டிபட்டி: விருதுநகர் மாவட்டம் கிருதுமால் நதி தண்ணீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக வினாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வைகை அணை நீர்மட்டம் இந்த ஆண்டு அக்.27 ல் அதிகபட்சமாக 70.24 அடிவரை உயர்ந்தது (மொத்த உயரம் 71 அடி). தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக அணையில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேறுவதால் அணை நீர்மட்டம் நவ. 24ல் 61 அடியாக குறைந்தது. தேனி மாவட்டத்தில் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கான நீர் வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து நேற்று 63.85 அடியானது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் கிருதுமால் நதி தண்ணீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக வினாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 1250 கன அடியாக வெளியேறிய நீர் நேற்று மதியம் 3:00 மணிக்கு வினாடிக்கு 700 கன அடியாக குறைக்கப்பட்டது. குடிநீருக்காக வழக்கம் போல் வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது. அணையில் இருந்து மொத்த நீர் திறப்பு வினாடிக்கு 1969 கன அடியில் இருந்து வினாடிக்கு 1419 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1346 கன அடியாக இருந்தது.