உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நூற்றுக்கணக்கான பதிவு பத்திரங்களை வழங்காமல் அலைக்கழிப்பு

நூற்றுக்கணக்கான பதிவு பத்திரங்களை வழங்காமல் அலைக்கழிப்பு

சொத்துக்களை விற்க, வாங்குவதற்கு அரசு நிர்ணயித்த முத்திரை கட்டணம் செலுத்தி சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவுடன், சம்பந்தப்பட்ட இடம் அல்லது வீட்டை சார்பதிவாளர் கள ஆய்வு செய்து முத்திரைத் தாள் கட்டணம் குறைவாக இருந்தால், குறைந்த கட்டணத்தை அரசின் கணக்கில் செலுத்த கூறி பின்னர் பத்திரங்கள் வழங்க வேண்டும். இப் பணிகளை சார் பதிவாளர்கள் 21 நாட்களில் செய்து தர வேண்டும்.உத்தமபாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய சார்பதிவாளர் சுரேஷ், கம்பம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவர் உத்தமபாளையம் அலுவலகத்தில் இருந்த விடுவித்து கம்பத்தில் பணியில் சேர்த்து 15 நாட்களாகி விட்டது.உத்தமபாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பதிவு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரங்கள் இன்னமும், சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கவில்லை. சார்பதிவாளர் சுரேஷ் மாறுதலில் சென்ற பின் புதியவர் பணியில் சேர்ந்தவுடன் வேறு ஊருக்கு மாறுதலில் சென்றார். நேற்று ஒருவர் புதிதாக பணியில் சேர்ந்துள்ளார். இதனால் பதிவு பத்திரங்களை கேட்டு செல்லும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.தற்போது பணியில் உள்ளவரால் பத்திரங்களை தர முடியாது. தற்போது கம்பத்தில் பணியில் உள்ளவர் உத்தமபாளையம் வந்து தான் கொடுக்க வேண்டும். அவர் கம்பத்தில் பணியில் இருப்பதால் உத்தமபாளையம் வர மறுக்கிறார். இங்கு பணியில் உள்ளவர்,'நாங்கள் என்ன செய்ய முடியும். அவர் பதிந்தது அவர் வந்து தான் கொடுக்க வேண்டும் என்கின்றனர்,இரு சார்பதிவாளர்களுக்கு இடையில் பத்திரம் பதிந்தோர் சிக்கிக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பதிவு பத்திரங்கள் உரியவர்களுக்கு கொடுக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இது குறித்து கம்பம் சார்பதிவாளரை அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் பதிலளிக்கவில்லை . மாவட்ட பதிவாளர் கவனம் செலுத்தி உத்தமபாளையத்தில் நிலுவையில் உள்ள பதிவு பத்திரங்களை உரியவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ