உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காட்டன் சேலை ஆர்டர்கள் அதிகரிப்பால் நெசவாளர்கள் மகிழ்ச்சி: முகூர்த்தம், ஓணம் பண்டிகையால் விற்பனை விறுவிறுப்பு

காட்டன் சேலை ஆர்டர்கள் அதிகரிப்பால் நெசவாளர்கள் மகிழ்ச்சி: முகூர்த்தம், ஓணம் பண்டிகையால் விற்பனை விறுவிறுப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.சுப்பலாபுரம், சக்கம்பட்டி பகுதியில் உற்பத்தியாகும் காட்டன் ரக சேலைகளுக்கு முகூர்த்த சீசன், ஓணம் பண்டிகைகளை முன்னிட்டு ஆர்டர்கள் அதிகரித்துள்ளது. சேலைகள் தேக்கமின்றி விற்பனையாவதால் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.டிசுப்புலாபுரம், சக்கம்பட்டி பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்படுகின்றன. இப்பகுதி நெசவாளர்கள் வீடுகளில் சொந்தமாக தறிகள் அமைத்தும் விசைத்தறிக்கூடங்களிலும் தொழில் செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் காட்டன் ரக சேலைகள் தமிழகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.வியாபாரிகள் நேரடியாக இப்பகுதிக்கு வந்தும் கொள்முதல் செய்கின்றனர். ஆன்லைன் மூலமும் ஆர்டர்கள் பெற்று 100க்கும் மேற்பட்டவர்கள் வியாபாரத்தை தொடர்கின்றனர். கடந்த சில மாதங்களில் வியாபாரத்தில் நிலவிய மந்த நிலையால் உற்பத்தியாளர்கள் கவலையில் இருந்தனர். இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக காட்டன் ரக சேலைகளுக்கான ஆர்டர் அதிகரித்துள்ளது.வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் கூறியதாவது: சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள விசைத்தறிகளில் 60, 80ம் நம்பர் நூல்களில் பல வண்ணங்களில் பிளைன், புட்டா, முந்தி, செட்டிநாடு, காஞ்சி காட்டன், கோர்வை, கட்டம் டிசைன்களில் தினமும் 6000 சேலைகள் வரை உற்பத்தி ஆகிறது. ரூ.400 முதல் 2500 வரையில் ரகத்திற்கு தக்கபடி விலை உள்ளது. முகூர்த்த சீசன் துவங்க இருப்பதால் சேலைகளுக்கான ஆர்டர்கள் அதிகரித்து வருகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகையிலும் இப்பகுதி சேலைகள் கூடுதலாக விற்பனையாகும். வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை மாறி உள்ளது. தற்போதுள்ள சுறுசுறுப்பு தீபாவளி வரை நீடிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ