வைகை அணையில் படகு குழாம் சவாரி துவங்குவது... எப்போது : அதிகாரிகள் ஒப்புதலுக்காக காத்திருக்கும் அவலம்
மாவட்டத்தில் வைகை அணை சுற்றுலா தலமாக உள்ளது. கேரளா, கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் வைகை அணையை பார்த்துச் செல்ல தவறுவது இல்லை. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக பூங்காவில் மாதிரி ரயில், இசை நடன நீரூற்று, தனியார் மூலம் இயக்கப்படும் ராட்டினம் ஆகியவை செயல்படுகின்றன. வலது கரை ரயில்வே பூங்கா அருகே செயல்பட்டு வந்த படகு குழாம் பழுதானதால் கடந்த பல மாதங்களாக செயல்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் படகு குழாம் மறுசீரமைக்கப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளது. வைகை அணை நீர்வளத் துறையினர் கூறியதாவது: படகு குழாமில் இரண்டு இருக்கைகள் கொண்ட படகில் சவாரிக்கு ரூ.90ம், நான்கு இருக்கைகள் கொண்ட படகில் சவாரிக்கு ரூ.170ம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது படகு குழாமில் சவாரியில் பாதுகாப்பை உறுதி செய்த பின் அதிகாரிகள் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் வழங்காமல் இருப்பதால் துவங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது., என்றனர். இந்நிலையில் படகுகளில் செல்ல ஆசையாக வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வது தொடர்கிறது.