மாவட்டத்தில் விரைவு போக்குவரத்து கழக பஸ் டெப்போ... அமைக்கப்படுமா; இடமிருந்தும் பல ஆண்டுகளாக முடங்கிய திட்டம்
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூரூ, திருச்சி என பல்வேறு நகரங்களில் பணிபுரிகின்றனர். மாவட்டத்தில் ரயில்வே ஸ்டேஷன் இருந்தாலும் போதிய அளவில் ரயில் இயக்கப்படாததால் ரோடு மார்க்கமாக பயணிப்பவர்கள் அதிகளவில் உள்ளனர். குறிப்பாக பஸ் பயணத்தை நம்பி, வியாபாரிகள், வர்த்தகர்கள், கல்லுாரி மாணவ, மாணவிகள், தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளனர். மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் (S.E.T.C.,) சார்பில், மாவட்டத்தில் இருந்து தினமும் சென்னைக்கு 11 பஸ்கள், பெங்களூருக்கு 2, திருப்பதிக்கு ஒன்று என, மொத்தம் 15 பஸ்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன. எஸ்.இ.டி.சி., பஸ்களை பராமரிக்க மாவட்டத்தில் டெப்போ இல்லை.இந்த பஸ்கள் தினமும் திண்டுக்கல்லில் இருந்து மாலை புறப்பட்டு தேனி மாவட்டத்திற்கு வருகிறது. இதில் பல நாட்கள் பயணிகள் இன்றி வெறும் பஸ்களாக போடி, கம்பம் வரை இயக்கப்படுகின்றன. இங்கிருந்து பயணிகளை ஏற்றி பிற நகரங்களுக்கு செல்கின்றன. சென்னை, பிற நகரங்களில் இருந்து தேனி வரும் பஸ்கள் பயணிகளை இறக்கிய பின் பராமரிப்பு, சுத்தம் செய்வதற்காக மீண்டும் திண்டுக்கல் 'டெப்போ'விற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக திண்டுக்கல் முதல் கம்பம் வரை 114 கி.மீட்டரும், திண்டுக்கல் முதல் குமுளி வரை 138 கி.மீட்டர் என தேவையற்ற பயணமாக உள்ளது. இதனால் கூடுதல் டீசல் செலவு ஏற்படுவதுடன் பணியாளர்களுக்கு பணிச்சுமையும் அதிகரிக்கிறது. போக்குவரத்து துறையினர் கூறியதாவது: 'டெப்போ' அமைக்க சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. தப்புக்குண்டு அருகே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டதால் அந்த திட்டம் முடங்கிவிட்டது., என்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'எஸ்.இ.டி.சி., பஸ் டெப்போ அமைந்தால் கூடுதல் பஸ்கள் இயக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும். டீசல் இழப்பு, பணிச்சுமை குறையும். தென் மாவட்டங்கள், கோவை, மைசூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் எஸ்.இ.டி.சி., பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றனர்.