| ADDED : ஜன 13, 2024 04:07 AM
பெரியகுளம், : தென்கரை பேரூராட்சி, கைலாசபட்டி 12வது வார்டில் குடியிருப்பு பகுதியில் சாக்கடை வசதி இன்றி கழிவுநீர் திறந்த வெளியில் செல்வதால் சுகாதாரக் கேடு நிலவுவதுடன் கொசுக்கடியால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.தென்கரை பேரூராட்சி 12 வது வார்டில் அம்பேத்கர் காலனி உள்ளது. இந்த வார்டில் 600 க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். பகலெல்லாம் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்கள் இரவில் நிம்மதியாக உறங்க வேண்டும் என்பது நியதி. ஆனால் இதற்கு மாறாக மக்களின் தூக்கத்தை கெடுக்கும் அளவிற்கு இந்த வார்டில் கொசுக்கடி தொல்லையும், சுகாதாரக் கேடு மோசமாக உள்ளது. ரேஷன் கடை கட்டுமானம் ஆமை வேகத்தில் நடப்பதால் இந்த பகுதி மக்கள் 1.5 கி.மீ., தூரம் நடந்து 13 வது வார்டிற்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இடம் விட்டு இடம் மாறி வருவதால் அந்த ரேஷன் கடையில் பாகுபாடு காட்டுகின்றனர். பல மணிநேரம் காத்திருந்து பொருட்கள் வாங்கி வர சிரமம் அடைகின்றனர். வார்டு பொதுமக்கள் கருத்து பொதுக்குழாய் வசதி இல்லை
பழனியம்மாள்,கைலாசபட்டி: 12வது வார்டில் தெருக்குழாய் வசதி இல்லாததால் 500 மீட்டர் தூரம் நடந்து சென்று ஒரு குடம் தண்ணீர் கொண்டு வரும் நிலை உள்ளது. தெரு விளக்ககு இல்லாததால் இருளில் தவிக்கின்றோம். இரவில் தெருவில் நடந்து செல்வது சிரமமாக உள்ளது. பெண்கள் சுகாதார வளாகம் கட்டி முடித்து தண்ணீர் வசதி செய்து தரப்படாததால் பயன்பாடின்றி கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் சிலர் ரோட்டோரத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. ரோடு வசதி இல்லை
காமாட்சி, கைலாசபட்டி : கைலாசபட்டியில் இருந்து 800 மீட்டர் தூரம் உள்ள டி.கள்ளிப்பட்டிக்கு இணைப்பு ரோடு வரை வசதி இல்லாததால் இந்தப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மழை காலங்களில் மண்ரோடு சேறும் சகதியுமாக உள்ளது. இரு கிராமத்தினரும் அதிகளவில் பயன்படுத்தும் இப் பாதையில் இணைப்பு ரோடு வசதி இல்லை. சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆங்காங்கே குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தோண்டிய பள்ளம் மூடப்படாமல் உள்ளது. பள்ளங்களை முறையாக மூட வேண்டும். சுகாதார வளாகம் தேவை
சுப்புராஜ்: ஆண்கள் சுகாதார வளாகம் இல்லாததால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். திறந்தவெளியில் சாக்கடை செல்வதால் சுகாதாரகேடு நிலவுகிறது. பெரும்பாலான பகுதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட வில்லை. சாக்கடை வசதி செய்து தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க பேரூராட்சி நிர்வாகம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.