திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு தற்போது, 520 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு எடுத்து நடத்திய குத்தகை 2028ல் நிறைவு பெறுகிறது.இருப்பினும், தற்போது ஆலையை மூட முடிவு செய்தனர். தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை அறிவித்தனர். இதன்படி, தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.தேயிலை பறிக்கும் பணி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, நுாற்றுக்கணக்கான ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் மாஞ்சோலையில் குழுவாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கண்ணீர் விட்டு அழுதனர். இன்று முதல் மாஞ்சோலையில் எந்த பணிகளும் நடக்காது. ஊழியர்கள் வீடுகளை காலி செய்ய 45 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது.மாஞ்சோலை தொழிலாளர்கள் நலச்சங்க நிர்வாகி வழக்கறிஞர் அரசு அமல்ராஜ் கூறியதாவது:மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக அனைத்துக் கட்சி குழு ஏற்பாடு செய்யப்பட்டது. தனியார் தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசே ஏற்று 'டான்டீ' வாயிலாக நடத்த வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டது. தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இதுகுறித்து அனைத்துக் கட்சி குழு சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 20ம் தேதி கூட உள்ள சட்டசபையிலும் உறுப்பினர்கள் இதை வலியுறுத்தி பேசுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
'பெரும் சதி நடக்கிறது'
கோவையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:மாஞ்சோலை தேயிலை தோட்டம், தொழிலாளர்கள் வாழ்வுரிமையை கேள்விக்குறியாக்கும் வகையில் விருப்ப ஓய்வு என்ற பெயரில், 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை, கட்டாயப்படுத்தி நிர்வாகத்தினர் கையெழுத்து வாங்கியுள்ளனர். அவர்கள், 45 நாட்களுக்குள் இருப்பிடத்தை காலி செய்ய நிர்வாகம் வற்புறுத்துகிறது. 8,873 ஏக்கர் நிலமும் வனத்துறைக்கு சொந்தமானது. வரும், 2028 ஜனவரியுடன் குத்தகை ஒப்பந்தம் முடிவடைகிறது. ஆனால், தொழிலாளர்களை வெளியேற்ற சட்டத்தில் இடமில்லை. இங்கு, 20, 30 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு விருப்ப ஓய்வின்போது, 2 லட்சம் ரூபாய் வரை தருவதாகக் கூறிவிட்டு, தற்போது, '25 சதவீதம் தொகை தருகிறோம்; இருப்பிடத்தைக் காலி செய்த பிறகு மீதம் தருகிறோம்' என, மோசடி நடக்கிறது.தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு, வேறு ஏதோ தேவைக்காக அந்த நிலத்தை பயன்படுத்த சதி நடப்பதாக தோன்றுகிறது. தமிழக அரசு தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.