| ADDED : ஜூலை 09, 2024 12:05 AM
திருநெல்வேலி: திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி வழியாக மேட்டுப்பாளையத்திற்கு நேற்று முன்தினம் கிளம்பிய ரயில், கல்லிடைக்குறிச்சியில் இரவு, 7:40 மணிக்கு நிற்காமல் சென்றது.கல்லிடைக்குறிச்சியில் இருந்து பழனி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு டிக்கெட் எடுத்த, 50 பயணியர் ரயில் நிற்காததால் தவித்தனர். ரயில்வே அதிகாரிகளுக்கு பயணியர் புகார் தெரிவித்தனர். இந்த பயணியர், ஈரோட்டில் இருந்து திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி வழியாக செங்கோட்டை சென்ற ரயிலில் ஏறி தென்காசியில் இறங்கினர். அவர்களை ஏற்றிச் செல்ல மேட்டுப்பாளையம் ரயில், தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த ரயிலில் வந்த பயணியரை ஏற்றிக்கொண்டு இரவு 10:40 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் புறப்பட்டது. நிற்காமல் சென்ற ரயில் டிரைவர் ஏ.எஸ்.விஷ்ணு, உதவி டிரைவர் சண்முக வேலாயுதம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, அதிகாரிகள் நேற்று உத்தரவிட்டனர்.