மழையால் வீடு இடிந்து மூதாட்டி பலி
திருநெல்வேலி: திருநெல்வேலியில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் திருநெல்வேலி நகர் மற்றும் ஜங்ஷன் சிந்துபூந்துறையில் பழைய வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. நேற்றும் மழை தொடர்ந்தது. மேலப்பாளையம் குறிச்சியில் முத்தையா என்பவரின் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த அவரது தாய் மாடத்தியம்மாள் 75, இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு அவர் இறந்தார். மேலப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.