போலி ஆவண மோசடி: சார்பதிவாளர் மீது வழக்கு
திருநெல்வேலி: ஓய்வு பெற்ற அரசு கூடுதல் செயலாளரிடம் போலி ஆவணங்கள் மூலம் 2 வீட்டு மனைகளை அபகரித்ததாக, திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீசார் சார்பதிவாளர் உட்பட மூவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை கொளத்துார் பெரியார் நகரைச் சேர்ந்தவர் பெருமாள் 89. தமிழக அரசின் ஓய்வு பெற்ற கூடுதல் செயலாளர். இவர் மற்றும் இருவர் சேர்ந்து 2011ல் திருநெல்வேலி புதுக் குளம் நவீன் நகரில் 8 வீட்டு மனைகளை வாங்கினர். அதற்கு பட்டாவும் பெற்றனர். சமீபத்தில் அந்த மனைகளுக்கான வில்லங்கச் சான்றிதழ் பெறப்பட்டபோது, 91 மற்றும் 92 ஆகிய இரண்டு மனைகள் 2007ல் கணேஷ், வானமாமலை என்பவர்களுக்கு விற்கப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் 2022ல் செண்பகவள்ளி என்பவருக்கு மீண்டும் விற்றதாகவும் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து பெருமாள் புகாரில் மேலப்பாளையம் சார்பதிவாளர், கல்யாணி, சென்னை உமாராணி ஆகியோர் மீது திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.