| ADDED : ஆக 30, 2011 12:03 AM
திருநெல்வேலி : குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிட்டு காலதாமதம் இல்லாமல் 'இந்து வள்ளுவன்' ஜாதிசான்றிதழ்களை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவள்ளுவர் குல முன்னேற்ற நலச்சங்கத்தின் தலைவர் ஆனந்தன், கலெக்டர் செல்வராஜிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தென்மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட குறுகிய சமுதாயம் இந்து வள்ளுவன் சமுதாயமாகும். ஜோதிடம் சொல்வது எங்கள் குலத்தொழில். கல்வி வளர்ச்சியிலும் எங்கள் சமுதாயம் மிகவும் பின் தங்கியுள்ளது. கல்விக்காக ஜாதி சான்றிதழ் வாங்க செல்லும் போது, அதிகாரிகளால் மிகுந்த அவதிக்கும், இன்னல்களுக்கும் உள்ளாகுகிறோம். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் எங்கள் சமுதாய குழந்தைகள் கல்வியை தொடர முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களில் சிலர் இந்து வள்ளுவன் என போலியாக சான்றிதழ்கள் பெறுவதாகவும் தெரிகிறது. எனவே எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரிகளால் காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது. எனவே எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிட்டு, திருவள்ளுவர் குல முன்னேற்ற சங்கத்தின் வழியாக பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு மட்டும் காலதாமதம் இல்லாமல் உடனடியாக 'இந்து வள்ளுவன்' என ஜாதிசான்றிதழ்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் மனுவில் கூறப்பட்டுள்ளது. திருவள்ளுவர் குல முன்னேற்ற நலச்சங்கத்தின் செயலாளர் மாணிக்கம், பொருளாளர் கஜேந்திரன், இளைஞரணி துணை செயலாளர் ரெங்கதுரை, தென்மாவட்ட இளைஞரணி பொருளாளர் கணேஷ், முன்னாள் செயலாளர் திருநாவுக்கரசு, கிளை செயலாள் மாரித்தங்கம் மற்றும் நாகராஜ் உடனிருந்தனர்.