உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  தனியார் மருத்துவமனை கட்டடத்தின் விதிமீறல்; பகுதியை அகற்ற 3 வாரம் கெடு

 தனியார் மருத்துவமனை கட்டடத்தின் விதிமீறல்; பகுதியை அகற்ற 3 வாரம் கெடு

மதுரை: நெல்லையில், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை கட்டடத்தின் குறிப்பிட்ட பரப்பளவை, மூன்று வாரங்களில் அகற்ற, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருநெல்வேலி பெர்டின் ராயன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'மருத்துவமனை கட்டடத்தில் பொதுக் கட்டடத்திற்குரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார். ஜூலை 18ல் இரண்டு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'விதிகளை மீறி கூடுதலாக கட்டப்பட்ட கட்டுமானத்தை அகற்ற எட்டு வாரங்களில் மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால் மாநகராட்சி கமிஷனரை ஆஜராக நேற்று முன்தினம் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. நேற்று, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணா ஆஜரானார். மருத்துவமனை நிர்வாக தரப்பு, 'அனுமதியற்ற கட்டுமான பரப்பளவை அகற்ற 12 வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்' என, மனு தாக்கல் செய்தது. கமிஷனர், ''அனுமதித்த பரப்பளவைவிட விதிகளை மீறி கூடுதலாக கட்டப்பட்ட கட்டுமானத்தை அகற்றினால் ஒட்டுமொத்த கட்டடத்திற்கும் பாதிப்பு ஏற்படும்,'' என்றார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: குறிப்பிட்ட பரப்பளவு விதிமீறல் கட்டடத்தை மூன்று வாரங்களில் மருத்துவமனை நிர்வாகம் அகற்ற வேண்டும். தவறினால் அடுத்த ஒரு வாரத்தில் அகற்ற கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து ஜன., 9ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankar
டிச 10, 2025 12:11

நீதிமன்ற அவமதிப்பு சர்வசாதாரணமாகிவிட்டது - ஊரன் சொத்தை ஆட்டயப்போடும் கூட்டம் இதை கண்டுகொள்ளாது


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை