பொன்னேரி, : வெள்ள பெருக்கின்போது அரித்துச் செல்லப்பட்ட ஆண்டார்மடம் ஆரணி ஆற்று தரைப்பாலம் சீரமைக்கப்படாமல் இருப்பதுடன், உயர்மட்ட பாலம் அமைப்பதிலும் அரசு மெத்தனம் காட்டுவதாக, கிராமவாசிகள் வேதனை அடைந்துள்ளனர்.பொன்னேரி அடுத்த காட்டூர் கிராமத்தில் இருந்த அபிராமபுரம், கடப்பாக்கம், சிறுபழவேற்காடு, ஆண்டார்மடம் கிராமங்கள் வழியாக பழவேற்காடு செல்லும் சாலை உள்ளது.இந்த சாலை ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் உள்ள கிராம சாலைகள் பிரிவுடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இணைக்கப்பட்டது.இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பழவேற்காடு அரசு மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு பொன்னேரி செல்ல இந்த சாலை வழியாக பயணித்து வந்தனர். சென்னை புறநகர் பகுதிகளைச் சேர்ந்த மீன் வியாபாரிகள், பழவேற்காடு சென்று வருவதற்கு இச்சாலையை பயன்படுத்தி வந்தனர்.சாலை முழுதும் சரளைக்கற்கள் பெயர்ந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையின் குறுக்கே மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட சிறுபாலங்களும் சேதமடைந்து, ஓட்டை உடைசல்களுடன் உள்ளன. பெரும்பாலான இடங்களில் சாலை ஒத்தையடி பாதையாகவே மக்களுக்கு பயன்படுகிறது. சாலை சீரமைக்கப்பட்டு, 10 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் புதுப்பிக்கபடாமல் உள்ளது. கடந்த 2015 மற்றும் கடந்தாண்டு ஏற்பட்ட புயலின்போது, சாலையின் பல்வேறு பகுதிகள் மழைநீரில் அரித்துச் செல்லப்பட்டன. அவையும் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளன.இந்த சாலையில், ஆண்டார்மடம் கிராமம் அருகே, ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் வீசிய 'மிக்ஜாம்' புயல் மழையின்போது, ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இந்த தரைப்பாலமும், அப்பகுதியில் 100 மீட்டர் தொலைவிற்கு சாலையும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது.இதனால், கிராமவாசிகள் மற்றும் வெளியிடங்களில் இருந்து பழவேற்காடு செல்பவர்கள் 10 கி.மீ., தொலைவு சுற்றி வஞ்சிவாக்கம் வழியாக பயணிக்கின்றனர். போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை மற்றும் ஆண்டார்மடத்தில் தரைப்பாலம் துண்டிப்பு ஆகியவற்றால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:பல ஆண்டுகளாக கரடு முரடான இந்த சாலையில் சிரமத்துடன் பயணிக்கிறோம். அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கும் வழியில்லை. இருசக்கர வாகனங்கள் மட்டுமே இந்த சாலையில் செல்ல முடியும். பல ஆண்டுகளாக சாலை இதே நிலையில் தான் உள்ளது.அதேபோல், ஆண்டார்மடம் பகுதியில் ஆற்றில் உள்ள தரைப்பாலம் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்படுகிறது. இதனால், ஆறு மாதங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ஒரு வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர்கள் எப்படி சென்று வருவர்.ஒவ்வொரு ஆண்டும் இதே சிரமம் தொடர்வதால், ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தியும் எங்களது கோரிக்கை கிடப்பில் உள்ளது. சாலை சேதம், துண்டிப்பு ஆகியவற்றால் எங்கள் கிராமங்கள் தனி தீவுகளாக உள்ளன. இனியும் காத்திருப்பதில் பயனில்லை என்பதால், போராட்டங்களுக்கு தயாராகி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.காட்டூர் - ஆண்டார்மடம் இடையேயான சாலை சீரமைப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், எந்த அறிவிப்பும் வெளியிட முடியவில்லை. ஆண்டார்மடத்தில் உயர்மட்ட பாலத்திற்கு முன்மொழிவு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதற்கும் விரைவில் தீர்வு கிடைக்கும்.கிராம சாலைகள் திட்ட அதிகாரிசென்னை.