ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, 2.86 கோடியில் மாமண்டூர் கூட்டு குடிநீர் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதன் வாயிலாக, 10 ஊரக பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயனடைவர். திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மாமண்டூர் ஊராட்சியில், மாமண்டூர் கிராமம், காலனி, நாவல்குப்பம், எஸ்.ஆர்.கண்டிகை ஆகிய பகுதிகள் உள்ளன. இதேபோல், வேளகாபுரம் ஊராட்சியில், வேளகாபுரம் கிராமம், காலனி, மேட்டுக்காலனி, பள்ளிக்காலனி ஆகிய பகுதிகள்உள்ளன. மேற்கண்ட இரண்டு ஊராட்சிகளில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட இரண்டு ஊராட்சிகளில் ஜல்ஜீவன் மிஷன் குடிநீர் திட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மாமண்டூர் கிராமத்தில், 2.86 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த ஆறு மாதத்திற்கு முன் துவக்கப்பட்டது.மாமண்டூர் கிராமத்தில், நான்கு இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, அங்கிருந்து தண்ணீர் எடுத்து, 10 மேல்நிலை நீர்த்தொட்டிகளில் சேகரிக்கப்படுகிறது. பின் குழாய் வாயிலாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும். பணிகள் முடிந்து நேற்று துவக்க விழா நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.மாமண்டூர் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜன், குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் ஆறுமுகம், நிர்வாக பொறியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஸ்ரீராம், அரி, தில்லைகுமார் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.