| ADDED : மே 11, 2024 01:21 AM
திருத்தணி:திருத்தணி மலைக்கோவில் பின்புறம் பகுதியில் முருகன் கோவிலின் உபகோவில்களான படவேட்டம்மன் மற்றும் ஏகாத்தம்மன் ஆகிய கோவில்களில் நேற்று கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை ஒட்டி, 108 பால்குட ஊர்வலம் மற்றும் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.காலை, 9:00 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை எடுத்து ஊர்வலமாக படவேட்டம்மன் மற்றும் ஏகாத்தம்மன் கோவில் வளாகத்திற்கு வந்தனர். பின், மூலவருக்கு சிறப்பு பால் அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.இரவு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏற்பாடுகளை மலைக்கோவில் மக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். திருவாலங்காடு அம்பேத்கர் நகரில் மந்தவெளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு ஆண்டு தோறும் மே மாதத்தில் ஜாத்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று ஜாத்திரை விழாவின் முதல் நாளில் பெண் பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்தனர். இதில் அம்பேத்கர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக 150 பெண்கள் பால் குடம் ஏந்திச் சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். குடிகுண்டா கோவிலில் சுபத்திரை திருமணம்
திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் ஊராட்சிக்குட்பட்ட குடிகுண்டா கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா துவங்கியது. இம்மாதம், 19ம் தேதி வரை நடைபெறும் விழாவில் தினமும் காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.நேற்று கோவில் வளாகத்தில் சுபத்திரை அம்மன் திருமணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் உற்சவர்கள் அர்ச்சுனன் மற்றும் சுபத்திரை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.வரும், 13 ம் தேதி அர்ச்சுனன் தபசும், 19 ம் தேதி காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி விழாவும் நடைபெறுகிறது. வரும், 14ம் தேதி தர்மர் பட்டாபிேஷகத்துடன் தீமிதி திருவிழா நிறைவு பெறுகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுார் கிராமத்தின் வடகிழக்கில் பெரியகுளம் அருகே அமைந்துள்ளது தர்மராஜா உடனுறை திரவுபதியம்மன் கோவில்.இந்த கோவிலின் அக்னி வசந்த விழா எனப்படும் தீமிதி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 13ம் தேதி திரவுபதியம்மன் திருக்கல்யாணம், 14ம் தேதி சுபத்திரை திருக்கல்யாணம், 16ம் தேதி மாலை 5:00 மணிக்கு அர்ச்சுனன் தபசு உள்ளிட்டவை நடைபெற உள்ளன. வரும் 19ம் தேதி காலை 10:00 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறும். 20ம் தேதி காலை 10:00 மணிக்கு தர்மராஜா பட்டாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.