| ADDED : மே 25, 2024 11:07 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாம்பழ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அப்பகுதியில் விளையும் மாம்பழங்களுக்கு மவுசு அதிகம்.தற்போது மாம்பழ சீசன் உச்சத்தில் இருப்பதால், ஆரம்பாக்கம் பகுதியில் தனியார் சிலர் செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்திருப்பதாக உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.அதன்படி திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில், கும்மிடிப்பூண்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் அடங்கிய குழுவினர், நேற்று முன்தினம் ஆரம்பாக்கம் பகுதியில் ஆய்வு நடத்தினர்.அப்போது, அங்குள்ள கடை ஒன்றில், கால்சியம் கார்பைட் வைத்து பழுக்க வைத்த, 1.5 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து பள்ளம் தொண்டி புதைத்து அழித்தனர். கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தை விளக்கி கூறி நோட்டீஸ் வழங்கினர். மீண்டும் இதே தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். மேலும் அங்குள்ள மாம்பழ வியாபாரிகளுக்கு, கால்சியம் கார்பைட் வேதி பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.