| ADDED : ஜூலை 09, 2024 11:10 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த பூவாமி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டு உள்ளனர். இவரது மாடுகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம்.நேற்று முன்தினம் காலை, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன், வினோத் ஆகியோரது பசுமாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. அவற்றில் இரண்டு பசுமாடுகள் மேய்ச்சல் முடிந்து, மாலை வீடு திரும்பாததால், அவற்றை தேடினர்.அப்போது அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், மின் ஒயரில் சிக்கி இரண்டு மாடுகள் இறந்து கிடப்பது தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின்போது, மின்சார ஒயர் அறுந்து விழுந்து, மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் அதில் சிக்கி இறந்ததும் தெரிந்தது.தகவல் அறிந்த மின்வாரியத்தினர், அங்கு விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்து, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.இச்சம்பவம் தொடர்பாக திருப்பாலைவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.