| ADDED : ஆக 23, 2024 02:42 AM
திருத்தணி:திருத்தணி வனச்சரகத்தில், 15,000த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் காப்பு காடு உள்ளது. இந்த காட்டில் செம்மரம், சந்தனமரம் உள்பட பல்வேறு விலை உயர்ந்த மரங்களை வனத்துறையினர் வளர்த்தும், பராமரித்தும் வருகின்றனர்.இந்நிலையில், திருத்தணி அடுத்த எஸ்.வி.ஜி.புரம் காப்பு காட்டு பகுதியில், சந்தன மரங்களை வெட்டுவதாக திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் சுப்பையாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்படி, வனச்சரகர்கள் விஜயசாரதி, அருள்நாதன் ஆகியோர் தலைமையில் வனவர் கிருஷ்ணன். காப்பாளர்கள் நடராஜன், டில்லிராஜா ஆகியோர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது நான்கு பேர் சந்தன மரத்தை வெட்டி துண்டுகளாக வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் தப்பியோடினார். திருத்தணி அடுத்த எல்.என். கண்டிகை சேர்ந்த கணேசன், 44, ரவி, 48, ஆந்திர மாநிலம் புத்துார் கல்யாணபுரம் ஏழுமலை, 20 ஆகிய மூன்று பேரை பிடித்து 15 கிலோ சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2.5 லட்சம் என வனத்துறையினர் தெரிவித்தனர். மூவரும் கைது செய்யப்பட்டனர்.