| ADDED : ஆக 19, 2024 11:16 PM
திருப்போரூர்: மாடம்பாக்கம், நுாத்தஞ்சேரியைச் சேர்ந்தவர் தாமோதரன், 53. இவர், மாமல்லபுரம் பேரூராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஜெயதுர்கா, 47. மாமல்லபுரம் தனியார் பள்ளி ஆசிரியை. இருவரும், மாமல்லபுரத்தில் வாடகைக்கு தங்கி, விடுமுறை நாட்களில் மாடம்பாக்கம் சென்று வருவர். தொடர் விடுமுறைக்காக, இருவரும் மாடம்பாக்கம் சென்றனர். நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, தம்பதி இருவரும் 'ஹீரோ ஸ்பிளன்டர்' பைக்கில், மாடம்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, சோனலுார் வனப்பகுதி அருகே, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றி செல்வதற்காக வந்த அந்நிறுவன பேருந்து, பைக்கின் பின்னால் வேகமாக மோதியது.இதில், தம்பதி இருவரும் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியாகினர்.பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற தனியார் பேருந்து, புதுப்பாக்கத்தில் ஆட்களை ஏற்றிக்கொண்டு, விபத்து நடந்த பகுதியை நோக்கி திரும்பி சென்றது.அப்போது, விபத்தை நேரில் பார்த்தவர்கள் பேருந்தை மடக்கி, கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தனியார் பேருந்து ஓட்டுனர் கோடீஸ்வரனை கைது செய்தனர்.பின், தம்பதியின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.