| ADDED : ஜூன் 13, 2024 12:27 AM
திருவள்ளூர்:நெல் வயல் வரப்புகளில், பயறு வகை பயிர் சாகுபடி செய்வதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.திருவள்ளூர் மாவட்ட விதை பரிசோதனை மையத்தின் மூத்த வேளாண் அலுவலர் சுகுணா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், மூன்று பருவங்களிலும் நெல் சாகுபடி செய்வதால், பூச்சி தாக்குதலால் உற்பத்தி தடையாக உள்ளது. இதிலிருந்து மீண்டுவர மற்றும் பயிர்களை பாதுகாத்து அதிக மகசூல் பெற நெற்பயிரின் வரப்புகளில் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்.வரப்பு பயிர் செய்வதால், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உயிரியல் பயிர் பாதுகாப்பாக அமையும். இயற்கை இரை விலங்கினங்களான ஊசித்தட்டான், பெருமாள்பூச்சி மற்றும் சிலந்தி எண்ணிக்கை பலமடங்கு பெருகுகிறது.நன்மை செய்யும் பூச்சிகளின் பெருக்கத்தால், தீமை செய்யும் பூச்சிகள் இயற்கை முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது. வரப்புகளில் மண் ஈரத்தை தக்கவைக்கும் தன்மை உள்ளதால், வரப்பு பயிர்களுக்கு ஈரத்தன்மை கிடைக்க பெரிதும் உதவுகிறது. வரப்பு பயிரில் 2.5 ஏக்கருக்கு 100 கிலோ மகசூல் கிடைப்பதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.வரப்பு பயிர் சாகுபடி செய்வதற்கு நல்ல முளைப்பு திறன் கொண்ட தரமான பயறு விதைகள், 1 ஏக்கருக்கு 1.2 கிலோ தேவைப்படும். எனவே, அனைத்து விவசாயிகளும் வரப்பு பயிர் சாகுபடி மேற்கொண்டு பயிர்களை பாதுகாத்து, அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.