| ADDED : ஜூலை 17, 2024 07:35 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையை அவசர சிகிச்சை பிரிவுடன் தரம் உயர்த்த, 3.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கும்மிடிப்பூண்டி சிப்காட், சிட்கோ, தேர்வாய் கண்டிகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகள் என, 350க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்களின் மருத்துவ சேவையை பூர்த்தி செய்ய கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில், அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. கும்மிடிப்பூண்டியில், 1993ம் ஆண்டு துவங்கப்பட்ட அரசு பொது மருத்துவமனையில், தற்போது தினமும், 900 முதல் 1,100 புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இருப்பினும் பாம்பு கடி, மாரடைப்பு, தொழிற்சாலை விபத்துகளில் சிக்கும் தொழிலாளர்களுக்கு, முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.உரிய நேரத்தில் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்க முடியாமல் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. நுாற்றுக்கணக்கான தொழிற்சாலை இருந்தும், அவசர சிகிச்சை வழங்க முடியாத நிலையில் கும்மிடிப்பூண்டி இருந்து வருகிறது.கும்மிடிப்பூண்டி பகுதியின் தேவையை கருத்தில் கொண்டு, அங்குள்ள அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையாக இருந்து வருகிறது.இந்நிலையில், அவசர சிகிச்சை பிரிவுடன், கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையை தரம் உயர்த்த, தமிழக தேசிய சுகாதார இயக்கம் சார்பில், 3.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.அதற்கான இட தேர்வு மற்றும் கட்டுமான திட்டங்கள் மீதான அறிக்கையை தயாரிக்க, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் கிராம சுகாதார இயக்குனரகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.