அம்பத்துார்: சென்னை, கொளத்துாரைச் சேர்ந்தவர் அகில், 30. இவர், கீழ் அயனம்பாக்கத்தில், எஸ்.கே.எம்., என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.விளம்பரங்கள், குறும்படம், ஆல்பம் பாடல் மற்றும் பெயரிடப்படாத தமிழ் படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். இவரது அலுவலகத்தில் பணியாற்றிய, கொரட்டூரைச் சேர்ந்த 28 வயது இளம்பெண், கடந்த மே 13ம் தேதி, அம்பத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அகில் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார்.புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:சினிமா தயாரிப்பாளரான முகமது அலி எனும் அகில், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, என்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார். என் குடும்பத்தாரிடமும், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். ஆனால், எனக்கு விருப்பம் இல்லை.இந்நிலையில், எனக்கு குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து, பலமுறை என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இதில் நான் கர்ப்பமானேன்.இதையடுத்து, சத்து மாத்திரை எனக் கூறி, கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து, கருவைக் கலைத்தார். இதற்கிடையே, என்னிடம் சிறுக சிறுக, 5 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றினார்.மேலும், நாங்கள் ஒன்றாக இருக்கும் ஆபாச வீடியோ எடுத்து, கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, என்னை ஏமாற்றிய அகில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து விசாரித்த அம்பத்துார் மகளிர் போலீசார், அகில் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.