ஆர்.கே.பேட்டை,ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வீரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது பந்திகுப்பம் கிராமம். இந்த கிராமத்தில், 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், கிராமத்தின் மேற்கில் கங்கையம்மன் கோவில் எதிரே அரசு நிதிநாடும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை ஒட்டி பொதுகுளம் உள்ளது. குளத்திற்கு வடக்கில் அமைந்துள்ள மலையில் இருந்து குளத்திற்கு நீர்வரத்து இருக்கிறது. இதனால் ஆண்டு முழுதும் குளம், தண்ணீரால் நிரம்பி காணப்படுகிறது. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது புதர் மண்டியுள்ளது. குளத்திற்கு படித்துறையும், சுற்றுச்சுவரும் இல்லாததால், பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். குளத்தை ஒட்டி அமைந்துள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, குளத்திற்கு கம்பி வேலி அல்லது சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். பாலாபுரம் அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம்
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் கிராமத்தில், மகன்காளிகாபுரம் சாலையை ஒட்டி, அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். சமீபத்தில், இந்த பள்ளியின் பழமையான கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. பள்ளி வளாகத்தில், மேற்கு மற்றும் வடக்கில் இருந்த கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும், இந்த வளாகத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக, வாகனம் வந்து செல்ல வசதியாக நுழைவாயில் பகுதியில் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் மீண்டும் கட்டப்படவில்லை. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. வகுப்பறை கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சுவர் அலங்கோலமாக கிடப்பதும், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதும் பெற்றோரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளியின் நுழைவாயில் பகுதியில், சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.