உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மதுரவாயலில் அடுத்த நாய்கடி சம்பவம் முதியவரை கடித்ததில் காலில் படுகாயம்

மதுரவாயலில் அடுத்த நாய்கடி சம்பவம் முதியவரை கடித்ததில் காலில் படுகாயம்

மதுரவாயல்:சென்னை, மதுரவாயல், ஆலப்பாக்கம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார், 52. இவரது மனைவி தேவி, 43.இருவரும், நேற்று முன்தினம் மாலை, வீட்டருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் லாவண்யா என்பவர் வளர்த்து வரும் நாட்டு நாய், ரமேஷ்குமாரை பார்த்து குரைத்தது. அவர் அதை விரட்டியபோது, ரமேஷ்குமாரின் காலில் கடித்துவிட்டு ஓடியது.இதில் காயமடைந்த ரமேஷ்குமார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு இரண்டு தையல் போடப்பட்டது.இச்சம்பவம் குறித்து, மதுரவாயல் போலீசில் நாயின் உரிமையாளர் லாவண்யா மீது புகார் அளிக்கப்பட்டது. லாவண்யாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையில், இது குறித்து அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், ஆலப்பாக்கம் சென்று, ரமேஷ்குமாரை கடித்த நாயை பிடித்துச் சென்றனர்.சில நாட்களுக்கு முன், பூங்காவில் விளையாடிய சிறுமியையும், அவரது தாயையும், 'ராட் வில்லர்' எனும் இரு நாய்கள் கடித்து குதறின.இச்சம்பவத்திற்கு பின் உஷாரான சென்னை மாநகராட்சி, 'செல்லப்பிராணிகள் வளர்ப்போர், மாநகராட்சியிடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அப்போது தான், செல்லப்பிராணிகளை பொது வெளியில் அனுமதிக்கப்படும். உரிமம் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்தது.இந்த சம்பவத்தை தொடர்ந்து, சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளைச் சேர்ந்தோரும் https://chennaicorporation.gov.in/ என்ற மாநகராட்சி இணையதளத்தில், பதிவு செய்ய துவங்கினர்.இதுவரை 1,165 நாய்களுக்கு பதிவு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. 2,500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கும் நிலையில், மாநகராட்சியின் இணையதளம் நேற்று முன்தினம் முடங்கியது.மற்ற சேவைகள் பாதிக்காத வகையில், செல்லப்பிராணிகள் பதிவு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு, இணையதளத்தின் மற்ற சேவைகள், நேற்று முன்தினம் மாலை முதல் வழங்கப்பட்டன.தற்போது, செல்லப்பிராணிகள் பதிவு செய்வதில் இருந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டு, நேற்று மாலை முதல், மாநகராட்சியின் இணையதளம் செயல்பட துவங்கியுள்ளது.எனவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டவர்கள், தங்களது செல்லப்பிராணிகளை பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

28ம் தேதி வரை மருத்துவ சிகிச்சை

ஆயிரம் விளக்கு மாநகராட்சி பூங்காவில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமி சுரக் ஷாவை, புகழேந்தி என்பவரின் நாய்கள், கடந்த 5ம் தேதி கடித்தன. காப்பாற்ற வந்த சிறுமியின் தாய் சோனியாவையும் நாய்கள் கடித்தன.இதில் காயமடைந்த தாய் மற்றும் மகள் ஆகியோர், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிறுமிக்கு தலையில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இந்த வாரத்தில் சிறுமி வீடு திரும்புவார் என, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வீட்டில் போதியளவு வசதியில்லை. எனவே, சிகிச்சை முடியும் வரை, மருத்துவமனையில் இருக்க அனுமதிக்கும்படி, சிறுமியின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.சிறுமி மற்றும் அவரது தாய் சோனியாவுக்கு முழுமையான சிகிச்சை முடியும் வரை, மருத்துவமனையில் தங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''சிறுமி நலமுடன் உள்ளார். அவருக்கு போட வேண்டிய தடுப்பூசி, 28ம் தேதி முடிவடைகிறது. அதுவரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை நாங்கள் ஏற்றுள்ளோம். மருத்துவமனை தரப்பிலும் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு உள்ளது,'' என்றார்.மதுரவாயலில் ரமேஷ்குமாரை கடித்த நாயை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று பிடித்துச் சென்றனர். ஆனால் சிறுமியை கடித்த இரு நாய்களையும் மாநகராட்சி சார்பாக யாரும் பிடிக்கவில்லை என கேள்வி எழுந்துள்ளது. அதற்கு மாநகராட்சி அதிகாரிகள், 'சிறுமியை கடித்த நாய்களை கைப்பற்றும் முன், அந்நாய்களுடன் அதன் உரிமையாளர், மதுரைக்கு சென்றுவிட்டார். அதனால் எதுவும் செய்ய முடியவில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை