மீஞ்சூர்: கொசஸ்தலை ஆற்றின் கரைகளை வெட்டி பாதை அமைத்து, உள்பகுதியில் இருந்து மணல், சவுடு மண் இரவு நேரங்களில் அள்ளப்படுவதால், மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் உள்ள புதிய பாலத்திற்கு ஆபத்து உருவாகி வருகிறது.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த சீமாவரம் பகுதி வழியாக கொசஸ்தலை ஆறு பயணித்து, எண்ணுார் கடலில் கலக்கிறது.இதே கிராமத்தில் ஆற்றின் குறுக்கே 150ஆண்டுகள் பழமை வாய்ந்த வல்லுார் அணைக்கட்டு உள்ளது. மழைக்காலங்களில் அணைக்கட்டில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவதுடன், ஆற்றின் கரைகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, பல்வேறு கிராமங்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுகிறது. கடந்த ஆண்டு மழையின்போது, வல்லுார் அணைக்கட்டு நிரம்பி, வினாடிக்கு, 70,000 கனஅடி உபரிநீர் வெளியேறியது. இதே பகுதியில், மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலைக்கு, ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம் அமைக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.இந்நிலையில், மேற்கண்ட அணைக்கட்டு மற்றும் ஆற்றுப்பாலம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள பகுதிகளில், கடந்த சில தினங்களாக மணல் மற்றும் சவுடுமண் அள்ளப்படுகிறது.இதற்காக ஆற்றின் கரைகளை வெட்டி எடுத்து, பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ஆற்றின் உள்பகுதியில், இரவு நேரங்களில் பொக்லைன், ஜே.சி.பி., இயந்திரங்கள் உதவியுடன் மணல் அள்ளப்படுகிறது.இவை மீஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளுக்கு, டிராக்டர்களில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. சவுடு மண் ஒரு டிராக்டர், 6,500 ரூபாய், மணல் ஒரு யூனிட், 8,000 ரூபாய் என, விற்பனையாகிறது.மீஞ்சூர் காவல்துறை, உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள் என, அனைவருக்கும் உரிய கவனிப்பு வழங்கப்படுவதால், யாரும் கண்டு கொள்வதில்லை. தினமும் இரவு நேரங்களில் தொடரும் இந்த மணல் கொள்ளையால் கனிமவளம் சூறையாடப்பட்டு வருகிறது.இரவு 9:00 மணிக்கு துவங்கி, காலை, 6:00 மணிவரை தொடர்ந்து, இந்த சவுடு மண் மற்றும் மணல் கொள்ளை அரங்கேறுகிறது. அங்கு, 10- 15 அடி ஆழத்திற்கு வெட்டி எடுக்கப்பட்டு உள்ளதால் கரைகளும், ஆற்று பகுதிகளிலும் பலவீனம் அடைந்து வருகிறது.புதிதாக கட்டப்பட்ட ஆற்றுப்பாலம் மற்றும் பழமையான வல்லுார் அணைக்கட்டு ஆகியவற்றுக்கும் இடைபட்ட பகுதியில் அள்ளப்படுவதால், அவற்றின் உறுதி தன்மைக்கும் பாதிப்பு உருவாகி வருகிறது.கடந்த ஆண்டு, மழை வெள்ளத்தின்போது, கொசஸ்தலை ஆற்றின் கரைகள் பாதிப்பு அடைந்ததால், தற்போது பல கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மணல் கொள்ளையர்களின் அட்டூழியம் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மணல் மற்றும் சவுடு மண் அள்ளப்படும் பகுதியின் அருகில், மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் புதியபாலம் உள்ளது. மணல் கொள்ளை தொடர்ந்தால், பாலத்திற்கு ஆபத்து ஏற்படும். அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் மணல் கொள்ளைக்கு வாய்ப்பில்லை.இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்களுக்கு உரிய 'கவனிப்பு' இருப்பதால், மணல் கொள்ளையை கண்டு கொள்ளாமல் உள்ளனர். கரைகள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளதால், அப்பகுதிகள் பலவீனம் அடைந்து, ஆற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில், மீஞ்சூர் பகுதிக்கு ஆற்று நீர் உள்புகுந்து, அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும். மாவட்ட நிர்வாகம் சவுடு மண், மணல் கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.