| ADDED : மே 27, 2024 06:42 AM
சென்னை,: சென்னையின் பல்வேறு பகுதியில் நீர்நிலைகளில் வசித்தோர், பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 2018ம் ஆண்டு மறுகுடியமர்வு செய்யப்பட்டனர். இதற்கு, ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.அப்போது, கணக்கீட்டை விட அதிக வீடுகள் இருந்ததால், 810 பேருக்கு, டோக்கன் மட்டும் வழங்கப்பட்டது; ஒதுக்கீடு ஆணை வழங்கவில்லை.இந்நிலையில், ஒதுக்கீடு ஆணை வழங்க முடிவு செய்த வாரியம், அவர்களின் ஆவணங்கள் பெறும் முகாம் நேற்று, செம்மஞ்சேரி வாரிய அலுவலகத்தில் நடந்தது.ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன. இதில், பலர் ரேஷன் கார்டு இல்லை என்றனர். இதனால், அவர்கள் மனுக்களை ஏற்கவில்லை. ஆத்திரமடைந்த மக்கள், அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதுகுறித்து, நிர்வாகப் பொறியாளர் குமரேசன் கூறியதாவது:முறைகேடை தடுக்கத்தான், ரேஷன் கார்டு கேட்கிறோம். டோக்கன் பெற்றவர்களுக்கு, நிரந்தர ஒதுக்கீடு ஆணை வழங்க ரேஷன் கார்டு அவசியம். மனுதாரர் பெயர், கணவர் அல்லது பாதுகாவலர் குடும்ப ரேஷன் கார்டில் இருக்கும். அதை மனுவுடன் சேர்க்க வேண்டும்.தனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால், அதற்குரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். இதை புரிய வைத்தோம். ரேஷன் கார்டு கொண்டு வருவதாகக் கூறி சமாதானம் அடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.