மேலும் செய்திகள்
கடல் ஆமைகள் முட்டையிடும் பருவம் துவக்கம்
7 minutes ago
ஊத்துக்கோட்டை - சிறுவாபுரி அரசு பஸ் இயக்கப்படுமா?
7 minutes ago
செவிலியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி
8 minutes ago
மாநிலத்தில், வீடற்ற ஏழை மக்களுக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், அடுக்குமாடி வீடு கட்டிக் கொடுக்கிறது. நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு இடங்களில் வசித்தோரும், இங்கு மறுகுடியமர்வு செய்யப்படுகின்றனர்.இந்த வகையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், 1.50 லட்சம் வீடுகள் உள்ளன.சென்னை அபார வளர்ச்சி அடைந்துள்ள மாநகரம். இதற்கு ஏற்ப நீர்நிலைகள் பாதுகாப்பு, சாலை விரிவாக்கம் போன்ற பணிகள் நடைபெறுகின்றன.குறிப்பாக, அடையாறு ஆறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய் மற்றும் ஏரிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.இதனால், இந்த பகுதியில் வசிப்போருக்கு மாற்று வீடு வழங்க, நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர்கள், வாரிய அலுவலகங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில், வீடற்றவர்கள் வீடு கேட்டு வழங்கும் மனுக்களின் எண்ணிக்கை, லட்சத்தைக் கடந்துள்ளது.இந்த வகையில் சென்னையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தேவைப்படுகின்றன. முதற்கட்டமாக, பகிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆறு, ஏரிகள், சதுப்பு நிலங்களில் வசிப்போருக்காக, 40,000 வீடுகள் தேவைப்படுகின்றன.ஆனால், 15,000த்திற்கும் குறைவான வீடுகள் தான், புதிதாக கட்டப்படுகின்றன. மீதமுள்ள வீடுகள் கட்ட நிலம் தேவை. மேலும் மத்திய, மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்க வேண்டும். ஆனால், நிலம் தேர்வு, நிதி ஒதுக்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளது.இதனால், வீடு ஒடுக்கீடு பெற்று, அதை 5 ஆண்டுகளுக்குள் சட்டவிரோதமாக விற்பனை செய்த நபர்கள் பெயரில் வழங்கிய ஒதுக்கீட்டு ஆணைகளை ரத்து செய்து, அந்த வீடுகளை வீடற்றவர்களுக்கு வழங்க, வாரியம் ஆலோசித்து வருகிறது.ஒரு வீடு கட்ட, 12 முதல் 15 லட்சம் ரூபாய் வரை மத்திய, மாநில அரசுகள் செலவு செய்கின்றன. ஒதுக்கீடு பெற்றவர்கள், இடத்தைப் பொறுத்து, 3 முதல் 8 லட்சம் ரூபாய்க்கு மறு விற்பனை செய்துள்ள விபரம், வாரிய அதிகாரிகள் நடத்திய கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.வீட்டு உரிமையாளர்கள், ஒதுக்கீடு ஆணையுடன், 20 ரூபாய் 'ஸ்டாம்ப் பேப்பரில்' எழுதிக் கொடுத்துள்ளனர். பெரும்பாலான வீடுகள், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. இதில், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர், கைகோர்த்து செயல்படுகின்றனர்.இவர்கள் ஒரு வீட்டை வாங்கி, 1 முதல் 2 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் வகையில், ரியல் எஸ்டேட் தொழில் போல் நடத்துகின்றனர்.அதேபோல் 5, 10, 15 வீடுகளை வாங்கி, வாடகை வீட்டு சம்பாதிக்கும் நபர்களும் உள்ளனர். இதனால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதுடன், தேவையான பயனாளிகளுக்கு வீடு கிடைக்காத சூழல் நிலவுகிறது. முதற்கட்டமாக, சென்னையில் மறுகுடியமர்வு செய்ய வேண்டிய வீடுகளின் தேவையை கருத்தில் கொண்டு, சட்டவிரோதமாக விற்பனை செய்த வீடுகள் மற்றும் வாடகை விட்டு சம்பாதிக்கும் வீடுகளை பறிமுதல் செய்ய, வாரியம் திட்டமிட்டுள்ளது.அதேபோல், சென்னையில் சொந்த வீடு இருந்தும், தவறான தகவல் கொடுத்து வீடு வாங்கிய நபர்களின் ஒதுக்கீடு ஆணையை ரத்து செய்யவும், அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:வீடு தேவையில்லாத போது, திருப்பித் தான் ஒப்படைக்க வேண்டும். ஆனால், வாங்கிய ஒரு சில மாதங்களிலேயே விற்பனை செய்வதும், வாடகைக்கு விடுவதும் அதிகமாக நடக்கிறது.தினமும் முதல்வர் தனிப்பிரிவு, வாரிய அலுவலகங்களில் வீடு கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.வீடுகளின் தேவையை கருத்தில் கொண்டு, ஐந்து ஆண்டுகளுக்குள் வீட்டை விற்பனை செய்தவர்கள், வாடகைக்கு விட்டவர்களின் ஒதுக்கீடு ஆணையை ரத்து செய்து, வீடுகளை பறிமுதல் செய்ய திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
குடியிருப்பு ஒதுக்கீடுதாரருக்குப் பின், அவரது நேரடி வாரிசுக்கு மட்டும் தான், வாரிசு முறையில் வசிக்க அனுமதி கிடைக்கும் வீட்டை விற்பனை செய்தால், ஒதுக்கீடு ஆணை தானாக ரத்தாகி விடும். மேலும், விற்பனை செய்த நபர் மீதும், வீட்டை வாங்கிய நபர் மீதும் கிரிமினல் நடவடிக்கை பாயும். மேற்கொண்டு ஒதுக்கீடு பெற தகுதியற்றவராகவும் கருதப்படுவார். வீடு வாங்கிய பின், ஏற்கனவே வேறு வீடு இருப்பதுடன், தவறான தகவல் கொடுத்து ஒதுக்கீடு பெற்றதாக விசாரணையில் தெரியவந்தால், ஒதுக்கீடு ஆணையை ரத்து செய்து, வீட்டை வாரியம் தன்வசப்படுத்திக் கொள்ளும். வீட்டை சட்டவிரோதமாக விற்பனை செய்தால், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சட்டம் - 1971, 11வது சட்டப்பரிவு 62-1ன்படி, மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும்.
இதுவரை வீடு பெற்றவர்கள், ஒதுக்கீடு ஆணையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, வாரியம் வலியுறுத்தி வருகிறது. இதுவரை, 80 சதவீதம் பேர் தான் ஆதாரை இணைத்துள்ளனர். மீதமுள்ள, 20 சதவீதம் பேர் இணைக்கவில்லை. இவர்களுக்கு ஏற்கனவே சொந்த வீடு இருப்பதும், 5, 10 வீடுகளை விலைக்கு வாங்கி, வாடகைக்கு விட்டுள்ளதும் தெரிகிறது. இவர்களுக்கு, நோட்டீஸ் வழங்கினால், உள்ளூர் அரசியல்வாதிகள், ரவுடிகள் தலையீடு அதிகரிக்கிறது என, வாரிய எஸ்டேட் அதிகாரிகள் கூறியுள்ளனர். - -நமது நிருபர் --
7 minutes ago
7 minutes ago
8 minutes ago