| ADDED : மே 04, 2024 09:46 PM
சென்னை:லண்டனில் இருந்து புறப்படும் 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' பயணியர் விமானம், தினமும் அதிகாலை 3:30 மணிக்கு, சென்னை விமான நிலையத்திற்கு வரும். மீண்டும் காலை 5:35 மணிக்கு, இங்கிருந்து லண்டன் புறப்பட்டு செல்லும்.இந்த விமானத்தில் பயணிப்பதற்காக, வெளியூர் மற்றும் உள்ளூர்களில் இருந்து 314 பயணியர், சென்னை விமான நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு முதலே வந்தனர்.ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு விமானம் வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்து அதிருப்திடைந்த பயணியர், விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.விமான வருகை தாமதமாகும் என, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், நேற்று முன்தினம் இரவு, இணையதளம் வாயிலாக பயணியருக்கு தகவல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.தங்களுக்கு அவ்வாறு தகவல் கிடைக்கவில்லை எனவும், வெளியூர்களில் இருந்து வந்துள்ளதால் எங்கு தங்குவது எனவும் கேள்வி எழுப்பினர்.இதையெடுத்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், அந்த பயணியரை சென்னை விமான நிலையத்தில் தங்க வைத்து, உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது.வழக்கமாக வரும் நேரத்தைவிட ஆறு மணி நேரம் தாமதமாக லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணியர் விமானம், நேற்று காலை 9:30 மணிக்கு சென்னையை வந்தடைந்தது. பின், காலை 11:30 மணிக்கு, இங்கிருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்றது.