சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் பூர்த்தி செய்யப்படுகிறது.கடலுார் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும் ராட்சத குழாய்கள் வாயிலாக சுத்திகரிக்கப்பட்ட நீர் எடுத்து வரப்படுகிறது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு, 13.2 டி.எம்.சி., ஆகும்.தொடர்ச்சியாக நீர் எடுக்கப்பட்டதால், வீராணம் ஏரி ஏற்கனவே வறண்டுவிட்டது. சோழவரம் ஏரி வறண்டுவிடும் கட்டத்தை நெருங்கியுள்ளது. மற்ற நான்கு ஏரிகளிலும் சேர்த்து 6 டி.எம்.சி., நீர் மட்டுமே உள்ளது.அதிகபட்சமாக, புழல் ஏரியில், 2.86, செம்பரம்பாக்கத்தில் 2.06, பூண்டியில் 0.66, தேர்வாய் கண்டிகையில், 0.35 டி.எம்.சி., இருப்பு உள்ளது.பூண்டி ஏரி நீரை, புழல் ஏரிக்கு திருப்பும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதனால், பூண்டி ஏரி நீர் இருப்பும் வேகமாக குறைந்து வருகிறது.கடந்தாண்டு, சென்னை குடிநீர் ஏரிகளில், 7.63 டி.எம்.சி., நீர் இருந்தது. தற்போது அதைவிட 1.63 டி.எம்.சி., நீர் குறைந்துள்ளது.இருப்பினும், தற்போதுள்ள நீரை வைத்து, சென்னையின் ஐந்து மாத குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில், குடிநீர் வாரிய அதிகாரிகள் உள்ளனர்.