சென்னை:சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் தற்போதைய மொத்த பரப்பளவு, 1,189 சதுர கி.மீ.,யாக உள்ளது. இதன்படி, 1,189 சதுர கி.மீ.,யாக உள்ள சி.எம்.டி.ஏ., பரப்பளவை, 8,878 சதுர கி.மீ.,யாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இந்நிலையில், குறிப்பிட்ட சில பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், விரிவாக்க பகுதியின் பரப்பளவு, 5,800 சதுர கி.மீ.,யாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து, இதில் சேர்க்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்புதல் தீர்மானம் பெறும் நடவடிக்கைகள், 2023ல் துவங்கின. இதன் தொடர் நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: கடந்த, 2018 ல் துவங்கிய சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்க பணிகள், இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது. பரப்பளவு குறைப்புக்கு அரசு ஒப்புதல் அளித்த நிலையில், கட்டுமான திட்ட அனுமதி அதிகாரத்தை டி.டி.சி.பி.,யிடம் இருந்து பெற சி.எம்.டி.ஏ., முயற்சித்தது. இதில் அதிகாரிகள் நிலையில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.