| ADDED : ஆக 21, 2024 11:05 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட, 27 வார்டுகளில், 450க்கும் மேற்பட்ட தெருக்களில், 16 ஆயிரத்து 985 வீடுகளில், 65 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நகராட்சி முழுவதும், 5 ஆயிரத்து 535 வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. வீட்டு இணைப்பு இல்லாத மக்களுக்கு, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.நகராட்சியில், வீட்டு குழாய் மற்றும் தெரு குழாய் மூலம், தினமும், 50 லட்சம் லிட்டர் அளவு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, பட்டரைபெரும்புதுார், புங்கத்துார் உள்பட, 13 இடத்தில், ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து, தினமும், 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்நிலையில், பட்டரைபெரும்புதுார் பகுதியில் இருந்து திருவள்ளூர் நகராட்சிக்கு வரும் குடிநீர் குழாய், டோல்கேட் அருகில் சேதமடைந்து விட்டது. கடந்த சில நாட்களாக, குழாயில் இருந்து தண்ணீர் விரயமாகி, குளம்போல் தேங்கி உள்ளது.எனவே, சேதமடைந்த குடிநீர் குழாயை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.