| ADDED : மே 31, 2024 02:42 AM
பள்ளிப்பட்டு,:பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து வேலுார், திருத்தணி, சோளிங்கர், ஆந்திர மாநிலம், சித்துார், புத்துார், திருப்பதி மற்றும் கர்நாடக மாநிலம், பெங்களூரு, உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பயணியர் வெளியூர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பேருந்து நிலையத்தில், தனியார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இறுதி ஊர்வல சவப்பெட்டி வாகனம், தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் இங்கு நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர். பயணியர் காத்திருக்க போதிய இட வசதி இன்றி தவிக்கின்றனர். பயணியருக்கு இருக்கை மற்றும் மின்விசிறி வசதிகள் இல்லாத நிலையில், தனியார் வாகனங்களும் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்துள்ளது பகுதிவாசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.