| ADDED : மே 10, 2024 01:00 AM
திருத்தணி, திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில், சொர்ணவாரி பருவத்தில், 1,110 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்கின்றனர். கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் முதல் வாரம் வரை, 271 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்துள்ளனர்.இந்நிலையில், நெல் சாகுபடியில், நடவு செய்த வயல்களில் பச்சை பாசி அதிகளவில் படர்ந்து, போதிய காற்றோட்டம் இல்லாததால் பயிர்களின் வேர் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. பச்சை பாசி அடர்த்தியாக படர்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து திருத்தணி பொறுப்பு வேளாண் உதவி இயக்குனர் பிரேம் கூறியதாவது:கோடைகால நெல் சாகுபடி பருவத்தில் நடவு மற்றும் நேரடி விதைப்பு பணிகள் திருத்தணி வட்டாரத்தில் நடந்து வருகின்றன.விவசாயிகள் நடவு செய்துள்ள நெற்பயிரில் பச்சை பாசி ஆங்காங்கே தென்படுகிறது. கட்டுப்படுத்த விவசாயிகள்,1 ஏக்கருக்கு, 2 கிலோ காப்பர் சல்பேட்டுடன், 20 கிலோ மணல் கலந்து வயல்வெளியில் சீராக போட வேண்டும்.அதே போல வேர்க்கடலை விதைப்பணிகள் முடிந்து, 40 - 45 நாட்களில் இரண்டாவது களை எடுக்கும் போது, 2.5 ஏக்கருக்கு, 400 கிலோ ஜிப்சம் போட வேண்டும். மேலும், மண் அணைப்பதால் வேர்க்கடலை அதிக மகசூல் தரும். தற்போது வரை, 82 ஏக்கர் பரப்பில் வேர்க்கடலைபயிரிட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.* கடம்பத்துார் ஒன்றியம் விடையூர் ஊராட்சியில், பேரம்பாக்கம் அடுத்த சகாயதோட்டம் தென்போஸ்கோ வேளாண்மை கல்லுாரி மாணவியர், ஊரக வேளாண் பணி அனுபவத்திட்டத்தின் கீழ் நேற்று விழிப்புணர்வு நடத்தினர். இதில் விடையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண்மை புதிய தொழில்நுட்பங்கள் குறித்து கூறினர்.தொடர்ந்து விடையூர் அடுத்த காரணி கிராமத்தில் விவசாயிகளுக்கு விதை நேர்த்தி, அக்னி அஸ்திரம் செய்முறை குறித்து மாணவியர் செய்முறை விளக்கத்தோடு கூறினர்.