| ADDED : ஆக 18, 2024 11:02 PM
திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் பெரும்பாலான கிராமங்கள் விவசாயப் பணிகள் மேற்கொள்கின்றனர். குறிப்பாக, நெல், கரும்பு மற்றும் காய்கறிகள் அதிகளவில் பயிரிடுகின்றனர். ஒன்றியத்தில் விவசாயிகள், 1,432 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிட்டு தற்போது அறுவடை பணியில் தீவிரமாக உள்ளனர். தற்போது, தினமும் இரவு அல்லது மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால், நெல் அறுவடை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மழைக்கு பயந்து விவசாயிகள் அவசரம், அவசரமாக நெல் அறுவடை செய்து, அரசு கொள்முதல் நிலையத்திற்கு அனுப்பாமல் தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்கின்றனர்.இதற்கு காரணம் திருத்தணி ஒன்றியத்தில் திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை பின்புறத்தில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையம், வேலஞ்சேரி மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய மூன்று இடங்களில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்று வரை திறக்கவில்லை.எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து மேற்கண்ட மூன்று இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறந்து, நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.