| ADDED : மே 05, 2024 10:55 PM
ஊத்துக்கோட்டை,: பூண்டி ஒன்றியம், அம்மம்பாக்கம் ஊராட்சியில் உள்ளது சீத்தஞ்சேரி கிராமம். ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். போக்குவரத்து மிகுந்த இந்த மாநில நெடுஞ்சாலையில் தினமும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.குறிப்பாக, ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கலெக்டர், எஸ்.பி., வேளாண்மை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் செல்ல சீத்தஞ்சேரி வழியே செல்ல வேண்டும். ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, அம்மம்பாக்கம், கூனிப்பாளையம், பென்னலுார்பேட்டை, அல்லிக்குழி, பிளேஸ்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் மக்கள் சீத்தஞ்சேரி கூட்டுச்சாலையில் இருந்து தான் செல்ல வேண்டும்.போக்குவரத்து நிறைந்த சீத்தஞ்சேரி கூட்டுச்சாலையில் 10 ஆண்டுகளுக்கு முன் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் வாயிலாக, 5 லட்சம் ரூபாயில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. துவக்கத்தில் முறையான பராமரிப்பால் இயங்கி கொண்டு இருந்த உயர் மின் கோபுர விளக்கு தற்போது பழுதடைந்து உள்ளது. இதுகுறித்து அம்மம்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.எனவே, மாட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நிறைந்த ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள சீத்தஞ்சேரி கூட்டுச் சாலையில் பழுதடைந்த உயர்மின் கோபுர விளக்கை சீர்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.