| ADDED : ஜூலை 27, 2024 07:08 AM
கடம்பத்துார், : கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி. இங்கு சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வகுப்பறை, இப்பகுதியில் உள்ள சாலையின் இருபுறமும் உள்ளது. பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக மேற்குபுறம் உள்ள பள்ளி வளாகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 6.18 மற்றும் 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பெண்கள் கழிப்பறைகள், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கட்டப்பட்டன.இதேபோல் பள்ளி வளாகத்தில் திருவள்ளூர் தொகுதி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் மதிய உணவுக்கூடம் கட்டப்பட்டது.இந்த மூன்று கட்டடங்களும் திறப்பு விழா நடத்தப்படாததால், பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருவதாக பள்ளி மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், மேற்கு புறம் உள்ள வகுப்பறையில் கல்வி பயிலும் மாணவர்கள் கிழக்கு புறம் உள்ள வகுப்பறை உள்ள பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சாலையை கடந்து சென்று வருகின்றனர். இதனால், மாணவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் ஆண்கள், பெண்கள் கழிப்பறை மற்றும் மதிய உணவு கூடம் ஆகிய கட்டடங்களை திறப்பு விழா நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டு மென மாணவ - மாணவியர், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.