| ADDED : ஏப் 10, 2024 11:22 PM
ஆவடி:ஆவடி புதிய ராணுவ சாலையில், மார்க்கெட் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, ஆவடியில் இருந்து வரும் திருவேற்காடு, பூந்தமல்லி, செங்குன்றம் மற்றும் தாம்பரம் செல்லும் பேருந்துகள் நின்று செல்கின்றன.ஆவடி துணை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே அமைந்துள்ள இந்த பேருந்து நிறுத்தத்தை மறைத்து, தினமும் 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்கின்றன.ஆவடி போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாததால், ஆட்டோக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும், இங்கு ஆட்டோக்கள் தொடர்ந்து நிறுத்தப்படுவதால், அரசு பேருந்துகள் சாலை நடுவே நிறுத்தப்படுகின்றன.இதனால், சாலை குறுகி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது, கோடை காலம் என்பதால், பயணியர் கொளுத்தும் வெயிலில், பேருந்து நிறுத்தத்தில் நிற்க முடியாமல், சாலையோரத்தில் உள்ள ஆவடி போக்குவரத்து போலீசார் கண்காணிப்புக்காக அமைக்கப்பட்ட நிழற்குடையில் அடிக்கடி தஞ்சம் அடைகின்றனர்.ஆவடி போக்குவரத்து போலீசார் அலுவலகம் எதிரே இருந்தும், அத்து மீறும் ஆட்டோக்களின் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த பகுதியில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆவடி துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் எதிரே நடக்கும் இந்த அத்துமீறலை தடுக்க முடியாத போலீசார் மீது அப்பகுதி வாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.எனவே, ஆவடி போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் தலையிட்டு, அத்துமீறும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.