| ADDED : மே 25, 2024 11:47 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், நெல், கரும்பு உள்ளிட்டவை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. விவசாயிகள் கூடுதலாக, காய்கறி மற்றும் மலர் தோட்டங்களையும் பராமரிக்கின்றனர்.இதையடுத்து நீண்டகால சாகுபடியாக மர தோப்புகளை பராமரிப்பதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். தென்னை, மா, சவுக்கு, யூகலிப்டஸ் உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகின்றனர். இதில், மதிப்பு மிக்க மரங்களான மகோகனி பயிரிடுவதற்கு தற்போது விவசாயிகள் இடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதிக பருமன் கொண்ட மரமாக வளரும் தன்மை கொண்ட இந்த மரங்கள் வேகமான வளர்ச்சி கொண்டுள்ளன. மர பலகைகளுக்கு மதிப்பு உயர்ந்து வருவதால், மர பலகை மற்றும் துாண்களுக்கு பயன்படும் மகோகனி, ஆப்ரிக்கன் கயா உள்ளிட்ட மர ரகங்கள் மதிப்பு மிக்க நீண்டகால பயிராக விவசாயிகளிடம் பிரபலம் அடைந்து வருகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த அப்பல்ராஜி கண்டிகை, ஸ்ரீகாளிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மகோகனி மரக்கன்றுகளை வளர்த்து வருகின்றனர். இதனிடையே, இந்த மரக்கன்றுகளுக்கு இடையே, ஊடுபயிராக நெல் பயிரிட்டு கூடுதல் வருவாய்க்கு முயற்சித்து வருகின்றனர். இதனால், மகோகனி மரங்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதுடன் தனியே பாசனம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்பது கூடுதல் சிறப்பு.