| ADDED : ஆக 20, 2024 11:58 PM
திருத்தணி:புதுடில்லியில் கடந்த 15 ம் தேதி நாட்டின், 78 வது சுதந்திர தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், தமிழக அரசு கல்லுாரிகளில் செயல்பட்டு வரும் நாட்டு நலப் பணித் திட்ட முகாம்களில் சிறப்பாக செயல்பட்ட 28 மாணவர்கள் அணி வகுப்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.இதில், திருத்தணி சுப்ரமணியசுவாமி அரசினர் கலைக் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு வணிகவியல் மாணவன் எம். முஹமத் தெளஷிப் தேர்வாகி, அணிவகுப்பில் பங்கேற்றார். தொடர்ந்து, 28 மாணவர்களுக்கும் பிரதமர் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து மாணவன் முஹமத் தெளஷிப்பை கல்லுாரி முதல்வர் பூரணசந்திரன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ரமேஷ், பாலாஜி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். தொடர்ந்து கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் சக மாணவ- மாணவியர் பாராட்டினர்.இது குறித்து மாணவன் முஹமத் தெளஷிப் கூறியதாவது: புதுடில்லி சுதந்திர தினவிழாவில் கடந்தாண்டு வரை என்.சி.சி., மாணவர்கள் தான் அணிவகுப்பு நடத்தி வந்தனர். முதன் முறையாக கடந்த, 15ம் தேதி சுதந்திர தினவிழாவில் என்.எஸ்.எஸ்., மாணவர்களும் அணிவகுப்பில் சேர்க்கப்பட்டனர். முதல் அணிவகுப்பில் நான் பங்கேற்றது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி. இது எனது பெற்றோர் மற்றும் பேராசிரியர்களுக்கும் மிக சந்தோஷமாக உள்ளது. நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் அணி வகுப்பு முதல் முறையாக சுதந்திர தின விழாவில் சேர்க்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.