| ADDED : ஜூலை 25, 2024 12:05 AM
பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சியில் உள்ள 7வது வார்டில், எம்.எஸ்.வி., நகரில் பூங்கா அமைந்துள்ளது. 1,365 சதுர மீட்டர் பரப்பளவு உடைய இந்த பூங்காவில், காலை - மாலை நேரங்களில், ஏராளமான மக்கள் நடைபயிற்சி சென்று பயனடைந்து வருகின்றனர். மேலும், பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனங்களில் சிறுவர்கள் விளையாடி மகிழ்கின்றனர். இந்நிலையில், இந்த பூங்கா வளாகம் முறையான பராமரிப்பின்றி உள்ளது. நடைபாதையை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் புற்கள் வளர்ந்துள்ளன.குறிப்பாக, சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் அமைந்துள்ள இடத்தில் அதிகளவிலான புற்கள் வளர்ந்துள்ளன.மேலும், பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வசிக்கும் இடமாக பூங்கா மாறியுள்ளது. இதனால், சிறுவர்களை அழைத்து செல்ல பெற்றோர் அச்சமடைகின்றனர்.எனவே, பூங்கா வளாகத்தை நகராட்சி நிர்வாகத்தினர் முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.