உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடுகாடுக்கு இடம் கேட்டு இஸ்லாமியர் காத்திருப்பு

இடுகாடுக்கு இடம் கேட்டு இஸ்லாமியர் காத்திருப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டக்கரை நேதாஜி நகரில், 300 இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான அடக்க ஸ்தலம், கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் உள்ள மசூதியின் பின்புறம் உள்ளது.அந்த இடம், கும்மிடிப்பூண்டியில் வசிக்கும் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களுக்கான பொதுவான இடம் என்பதால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு கி.மீ., தொலைவில் இருக்கும் காரணத்தால், நேதாஜி நகரில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்காக, தனி அடக்க ஸ்தலம் ஒதுக்க வேண்டும் என, 2008ம் ஆண்டு முதல், அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இஸ்லாமியர், ஹிந்துக்கள், கிறிஸ்தவ மக்களுக்கு பொதுவாக, தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில், சமத்துவ இடுகாடிற்கு இடம் ஒதுக்கப்படும் என, 2014ல், தேர்வழி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி, அந்த ஆண்டே, தேர்வழி கிராமம், சர்வே எண்: 502/2 மற்றும் 503ல் உள்ள 90 சென்ட் இடம், மூன்று மதத்தினருக்கான இடுகாடு மற்றும் சுடுகாட்டிற்காக ஒதுக்கப்பட்டது.அதை எதிர்த்து, தேர்வழி கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆட்சேபனை தெரிவித்து, அரசுக்கு மனு அளித்தனர். அதன்படி, அரசு தரப்பில் நடந்த சமாதான கூட்டத்தில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.அதன்பின், கிணற்றில் போட்ட கல் போன்று அந்த விவகாரத்தை அரசு கண்டுக்கொள்ளவில்லை. இதனால், கைக்கு எட்டியது கிடைக்காமல் போன வேதனையில் நேதாஜி நகர் இஸ்லாமியர்கள் உள்ளனர்.மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, 17 ஆண்டு கால எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என, நேதாஜி நகர் இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ